சென்னை: ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவை சேர்ந்த பேட்ரிக் என்பவரது மகள் பேட்ரிசியா (13).சிறு வயதிலேயே குரூசோன்சிண்ட்ரோம் எனும் மரபணுகோளாறால், சிறுமியின் கபாலம் மற்றும் முகத்தின்வளர்ச்சி பாதிக்கப்பட்டது. மூச்சுக்குழல் இடைவெளியும் குறுகலாக இருந்ததால், 3 வயதில் இருந்தே மூச்சுவிட முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதையடுத்து, சிக்கலான பிறவிக் குறைபாடுகளால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உதவும் உலக முகச் சீரமைப்பு அறக்கட்டளை பற்றி அறிந்து, அவர்களது உதவியை பேட்ரிக் நாடினார். இந்த அறக்கட்டளையின் கீழ் செயல்படும், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பாலாஜி பல், முகச் சீரமைப்பு மருத்துவமனைக்கு சிறுமி அனுப்பிவைக்கப்பட்டார்.
பிறந்ததில் இருந்து பேச முடியாமல் தவித்த சிறுமி, 13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அளிக்கப்பட்ட சிகிச்சையால் பேசத் தொடங்கியுள்ளார். இதனால் சிறுமியும், அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பாலாஜி பல்,முகச் சீரமைப்பு மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் எஸ்.எம்.பாலாஜி கூறியதாவது: சிறுமிக்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை முறை,இந்தியாவிலேயே முதல்முறையாகும்.
இதற்கு தேவையான ரூ.6 லட்சம் மதிப்பிலான 2 கருவிகளை அமெரிக்காவின் கேஎல்எஸ் மார்ட்டின் என்ற நிறுவனம் வழங்கியது. இது இலவசமாகவே சிறுமிக்கு வழங்கப்பட்டுள்ளது இதுதவிர, சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட மொத்தசிகிச்சைக்கான செலவு ரூ.12 லட்சத்தையும் உலகமுகச் சீரமைப்பு அறக்கட்டளையே ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறுமி நலமுடனும், மகிழ்ச்சியுடனும் நைஜீரியா திரும்புகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
சிகிச்சை அளித்த மருத்துவர் எஸ்.எம்.பாலாஜிக்கு, சிறுமி பேட்ரிசியா தன் கைப்பட எழுதிய நன்றி கடிதத்தை பரிசாக வழங்கியுள்ளார்.