தமிழகத்தில் பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள 98 காலி பணியிடங்களுக்கு 53 ஆயிரத்து 555 பேர் ஞாயிற்றுக்கிழமை தேர்வு எழுதினர்.
பொதுப்பணித் துறையில் 18 உதவி இயக்குநர் இடங்களும் 80 உதவிப் பொறியாளர் இடங்க ளும் காலியாக உள்ளன. அந்த இடங் களுக்கான தேர்வு தமிழகத்தில் 15 மாவட்டங்களில் 176 இடங்களில் நடைபெற்றன. இதற்கான தேர்வை 53 ஆயிரத்து 555 பேர் எழுதினர்.
சென்னையில் லேடி வெலிங்டன் கல்லூரி உள்ளிட்ட 50 இடங்களில் நடைபெற்ற தேர்வில் 16 ஆயிரத்து 375 பேர் கலந்துகொண்டனர். இதில் முதல் தாளில் 300 மதிப்பெண்களுக்கு விருப்பப் பாடத்திலும், இரண்டாம் தாளில் 200 மதிப்பெண்களுக்கு பொது அறிவிலும் கேள்வி கேட்கப்படும். இதில் தேர்வாகும் நபர்களுக்கு 70 மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
திருவல்லிக்கேணி என்.கே.டி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை பார்வையிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்ரமணியன் நிருபர்களிடம் பேசும்போது, “இந்த தேர்வுக்கான பதில்கள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும். 3 மாதங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும்” என்றார்.