சென்னையில் 11 மாடி கட்டிடம் இடிந்து 61 பேர் உயிரிழந்த சோகம் அடங்குவதற்குள் திருவள்ளூர் அருகே மீண்டும் ஒரு கட்டிட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். சனிக்கிழமை இரவு பெய்த மழை யால் தனியார் நிறுவன சேமிப்பு கிடங்கு சுற்றுச் சுவர் இடிந்து குடிசைகள் மீது விழுந்ததில் குழந்தை உள்பட 11 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அலமாதி ஊராட்சியில் உள்ளது உப்பரபாளையம். இங்கு செங்குன்றத்தைச் சேர்ந்த பாலா என்பவருக்கு சொந்தமான 10 ஏக்கர் பரப்பில் இரு சேமிப்பு கிடங்குகள் உள்ளன.
இதை பெப்ஸி உள்ளிட்ட இரு தனியார் நிறுவனங்கள் சேமிப்பு கிடங்குகளாக பயன்படுத்தி வருகின்றன. இந்த கிடங்கைச் சுற்றிலும் 17 அடி உயரத்துக்கு சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சேமிப்பு கிடங்குக்கு அருகிலேயே 6 ஏக்கரில் பாலாவின் சகோதரர் மோகன் தனது மனைவி வசந்தி பெயரில் சேமிப்பு கிடங்கு ஒன்றை கட்டி வருகிறார். கடந்த 6 மாதமாக நடந்து வரும் இந்த கட்டுமானப்பணியில் ஆந்திரம் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த 30 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இவர்கள் தங்குவதற்காக பாலா வுக்கு சொந்தமான சேமிப்பு கிடங்குகளின் சுற்றுச் சுவரை ஒட்டியபடி 5 குடிசைகள் அமைக்கப் பட்டிருந்தன. இதில் அவர்கள் தங்கி பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில் சனிக்கிழமை சம்பள நாள் என்பதால் கூலியை பெற்றுக்கொண்டு தொழிலாளர்களில் 18 பேர் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். 12 பேர் மட்டும் குடிசைகளில் தங்கி யிருந்தனர். அப்போது இரவு அப்பகுதியில் கனமழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது 600 அடி நீள சுற்றுச் சுவரில் 121 அடி நீளப் பகுதி மட்டும் திடீரென இடிந்து தொழிலாளர்கள் தங்கிய குடிசைகள் மீது விழுந்து நசுக்கியது. இந்த கிடங்கு ஊருக்கு ஒதுக்குப்புறமாக மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைந்திருந்ததால் விபத்து பற்றி ஊர் மக்களுக்கு தெரியவில்லை.
இதனிடையே காலையில் இயற்கை உபாதை கழிக்க அப்பகுதிக்கு வந்த கிராம மக்கள் சிலர் இந்த கோர விபத்தை பார்த்து போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
11 சடலங்கள்
அப்போது 4 பெண்கள், 6 ஆண்கள், ஒரு குழந்தை என 11 சடலங்களை மீட்டனர். பின்னர் அவற்றை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இடிபாடுகளில் சிக்கியிருந்த நாகராஜ்(19) என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இறந்தவர்கள் விவரம்: நாகராஜனின் தந்தை கொண் டய்யா (50), ஜெயம்மாள்(65), அவரது தங்கை லெட்சுமி(35), கணவர் செஞ்சய்யா(45), இவர்களின் குழந்தை ஜெகதீஸ்(2), பண்டியா(45), சிம்மாத்திரி(40), ராமு(19), ஒடிசாவைச் சேர்ந்த அஜீத் மண்டல்(55), அவரது மனைவி லீமா மண்டல்(40). ஒருவரின் பெயர் தெரியவில்லை.
கிடங்கு உரிமையாளர் கைது
மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் சம்பவ இடம் விரைந்தார். சேமிப்பு கிடங்கின் உரிமையாளர் பாலா, புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டித்தின் மேற்பார்வையாளர் தேவேந்திரன் ஆகியோரை கைது செய்துள் ளதாக எஸ்பி சரவணன் கூறினார். மற்றொரு உரிமையாளரான மோகன், அவரது மனைவி வசந்தி தலைமறைவாகிவிட்டனர்.
ரூ.2 லட்சம் நிவாரணம்
விபத்தில் உயிரிழந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித் துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.