தமிழகம்

நடிகர் தனுஷூக்கு எதிரான வழக்கு - வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

கி.மகாராஜன்

மதுரை: நடிகர் தனுஷூக்கு எதிரான வழக்கு வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நடிகர் தனுஷ் என் மகன் என உரிமை கோரி வருகிறேன். இது தொடர்பான வழக்கில் நடிகர் தனுஷ் தரப்பில் நீதிமன்றத்தில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தனுஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் என் புகாரை விசாரிக்க விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டது.

ஆனால் மதுரை 6வது நீதித்துறை நடுவர் மன்றம் என் வழக்கை தள்ளுபடி செய்தது. ஆவணங்களின் அடிப்படையில் எனது வழக்கில் முகாந்திரம் இல்லை என நீதித்துறை நடுவர் முடிவுக்கு வந்துள்ளார். தனுஷ் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழின் உண்மை தன்மையை ஆராய அந்த சான்றிதழ் மதுரை மாநகராட்சிக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவு வருவதற்குள் என் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

எனவே தனுஷ் மீது போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக வழக்கு பதிவு செய்யக்கோரி நான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதித்துறை நடுவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, எனது மனுவை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, "உயர் நீதிமன்ற உத்தரவுபடி நடிகர் தனுஷின் அங்க அடையாளங்கள் ஆய்வு செய்யப்பட்ட போது நான் உயர் நீதிமன்ற கிளை பதிவாளராக இருந்தேன். இதனால் வழக்கு விசாரணை வேறு நீதிபதிக்கு மாற்றப்படுகிறது" என உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT