எம்பி மாணிக்கம் தாகூர் 
தமிழகம்

மதுரை எய்ம்ஸ்: தென்மாவட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சிப்பதாக மாணிக்கம் தாகூர் எம்.பி சாடல்

என். சன்னாசி

மதுரை: மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் மத்திய அரசு தென் மாவட்ட மக்களை தொடர்ந்து வஞ்சிக்கின்றது என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடியுள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2019 ஆம் நடந்தது. நான்காண்டுகளாகியும் மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் கூட இன்னும் முழுமை பெறாத நிலை நீடிக்கிறது. இதற்கிடையில், சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் வந்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பூர்வாங்க பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனிடையே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு குறித்த ஆர்டிஐ தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் 2014-க்கு பிறகு இந்தியாவில் தொடங்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளின் நிலை குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு பதிலளித்த மத்திய சுகாதார அமைச்சகம், ”நாடு முழுவதும் தொடங்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துமவனைகளின் பணிகள் நிதி ஒதுக்கப்பட்டு தொடர்ந்து கட்டுமானம் நடக்கும் நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள ரூ.1977.8 கோடி செலவாகும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை மத்திய அரசால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கென ரூ.12.35 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள்ளது. 2026-ல் அக்டோபரில் கட்டுமான பணி முடியும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு திட்டமிட்ட நிதியில் 1 சதவீதத்திற்கும் குறைவான நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டரில் விமர்ச்சித்துள்ளார்.

மேலும், அவர், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து சமீபத்தில் வெளியான ஆர்டிஐ தகவலில், எய்ம்ஸ்க்கு ரூ. 12.35 கோடி மத்திய அரசு ஒதுக்கியதாக தகவல் கிடைத்துள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டை மட்டுமின்றி, குறிப்பாக தென்மாவட்ட மக்களையும் தொடர்ந்து வஞ்சிக்கின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT