ஈரோடு கிழக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமார் | படம்: எஸ்.குருபிரசாத் 
தமிழகம்

வாக்களிக்கத் தகுதியான ஆவணங்கள் தொடர்பாக அறிவுறுத்தியுள்ளோம்: தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார்

செய்திப்பிரிவு

சென்னை: மையில் பிரச்சனை இல்லை என்று ஈரோடு கிழக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு சரியாக இன்று (பிப்.27) காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே மக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இத்தேர்தலில் வாக்களிக்க 2.27 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. காலை 9 மணி வரை 10.10% வாக்குப் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் கூறுகையில், "காலை 9 மணி வரை 10.10% வாக்குப் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு தொடங்கிய போது ஏற்பட்ட சில பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டு தற்போது எந்த பிரச்சனையும் இல்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மையில் எந்த பிரச்சனையும் இல்லை. எப்படி மை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் தொடர்பாகவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதிக வாக்குச்சாவடி உள்ள இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.

தொகுதியில் சில வாக்குச்சாவடிகளில் ஆதார் அட்டையுடன் வாக்களிக்கவந்த வாக்காளர்கள் திருப்பியனுப்பப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து ஆவணங்கள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத அத்தகைய வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக, பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனுமொன்றை காண்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • ஆதார் அட்டை
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை
  • வங்கி/அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடிய)
  • தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை
  • ஓட்டுநர் உரிமம்
  • நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN CARD)
  • தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வாங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை
  • இந்திய கடவுச் சீட்டு
  • புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்;
  • மத்திய/ மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களால்/ வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்
  • பாராளுமன்ற/சட்டமன்ற/சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை
  • இந்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்படும் தனித்துவமான இயலாமைக்கான அடையாள அட்டை (UDID).
SCROLL FOR NEXT