ஈரோடு: வாக்குப்பதிவின் போது கையில் வைக்கப்படும் மை அழிவதாக அதிமுக சார்பில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப்.27) காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் கையில் வைக்கும் மை அழிவதாக அதிமுக சார்பில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக பேசிய தேர்தல் நடத்தும் அலுவலர், பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.
ஈவிகேஸ் இளங்கோவன் கருத்து: ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி துவக்கப் பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் மை அழிவது புகார் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், "என்னிடம் அப்படி ஒரு நிகழ்வு பற்றிச் சொன்னார்கள். இன்னும் அதுபற்றி விரிவாக நான் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. நான் வாக்களிக்கும் போது என் கையில் மை வைக்கப்பட்டது. 10 நிமிடம் ஆகியும் அப்படியே இருக்கிறது. தேர்தலில் காமராஜர் தோற்றபோது, அவரிடம் வாக்காளர்களுக்கு வைக்கப்பட்ட மை சரியில்லை என்று சொன்னார்கள். மை யாவது, மண்ணாங்கட்டியாவது. மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். அவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஆகவே, அநாவசியமாக மை மீது குற்றச்சாட்டை வைக்காதீர்கள் என்று அவர் சொல்லியிருக்கிறார். அதே வாதம் இப்போதும் பொருந்தும். " என்று கூறிச் சென்றார்.