சென்னை: நாட்டின் முக்கியமான, பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். இது தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டக் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படுகிறது.
இங்கிருந்து, கேரளா, கர்நாடகா,ஆந்திரா மற்றும் பல மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து தினமும் 80-க்கும் மேற்பட்ட விரைவு,மெயில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஏறத்தாழ 1.5 லட்சம் பயணிகள் தினமும் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்த ரயில் நிலையத்தை சர்வதேச தரத்தில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்நிலையத்தை அமைதியான ரயில் நிலையமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வழிகாட்டுதல்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை (புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்) அமைதியான நிலையமாக வைத்திருக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது.
தகவல் அளிக்கும் கவுன்ட்டர்: இந்த ரயில் நிலையத்தில் ஆடியோ அறிவிப்புகள் இருக்கக்கூடாது என்றும், ரயில் தொடர்பான தகவல்களை காட்சிப்படுத்தல் மூலமாக வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், பயணிகளுக்கான தகவல்களை அளிக்க போதிய கவுன்ட்டர்களை தயார் செய்ய வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இங்கு பெரும்பாலான நேரங்களில் பல்வேறு அறிவிப்புகள் மிக சப்தமாக ஒலிபரப்பப்பட்டன. இந்த அறிவிப்புகள் பயணிகளுக்கும், பாதுகாப்புப் பணியில் இருப்பவர்களுக்கும் மிகுந்தசிரமத்தைக் கொடுத்தன. இதற்குத் தீர்வுகாணும் வகையில், அறிவிப்புகளை நிறுத்தி, அமைதி நிலையமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.