ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இறுதிகட்டத்தில் ‘ஆர்.கே. நகர் பார்முலா’வை திமுக மற்றும் அதிமுகவினர் கையில் எடுத்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. இத்தேர்தலில் வாக்காளர்களைக் கவரும் வகையில் திமுக மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். வாக்காளர்களை எதிர்க்கட்சியினர் சந்திக்க முடியாதபடி கூடாரம் அமைத்து அமர வைத்ததில் தொடங்கி, கறி விருந்து, வாக்குக்கு பணம், பலவகையான பரிசுப்பொருட்கள் என திமுக அமைச்சர்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டனர்.
அதிமுக தரப்பில் பணம் மற்றும் பரிசுப்பொருட்களை வழங்கியதோடு, திண்ணைப் பிரச்சாரம் உள்ளிட்டவற்றின் மூலம் வாக்குகளை வளைக்க முயற்சி எடுத்துள்ளனர்.
இந்நிலையில் இறுதிகட்டமாக வாக்காளர்களை திருப்திப்படுத்தும் முயற்சியில் இரு கட்சி நிர்வாகிகளும் ஈடுபட்டனர். வெளியூருக்கு இடம் மாறியவர்கள் உட்பட இதுவரை பணம் மற்றும் பரிசு பெறாத வாக்காளர்கள் பட்டியல் எடுக்கப்பட்டு, இன்று காலை அவர்களை ‘கவனிப்பதாக’ உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதோடு, ஈரோடு இடைத்தேர்தலில் ‘ஆர்.கே.நகர் பார்முலா’வையும் இரு கட்சிகளும் அமல்படுத்தியுள்ளன.
இதுகுறித்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது: திமுக தரப்பில் ஒரு வாக்குக்கு ரூ.3,000 மற்றும் குக்கர், வெள்ளிக் கொலுசு, ஸ்மார்ட் வாட்ச், வெள்ளி டம்ளர், வெள்ளித் தட்டு, குங்குமச்சிமிழ், வெள்ளி விளக்கு, பேன்ட், சட்டை, எவர்சில்வர் குடம், பரிசுக் கூப்பன் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக சில பகுதிகளில் தங்கக் காசு மற்றும் தங்க மூக்குத்தி வழங்கப்பட்டுள்ளது.
திமுகவினர் வாக்குக்கு ரூ.5,000 கொடுப்பதாக தகவல் பரவிய நிலையில், ரூ.3,000 மட்டுமே விநியோகிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியை போக்கும் வகையில் வீடுகள்தோறும் ஒரு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்ற பின்பு, இந்த டோக்கனை கொடுத்துரூ.5,000 மதிப்புள்ள பொருளைப் பெற்று கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தரப்பில் வெள்ளிப் பொருட்கள், ஹாட்பாக்ஸ், வேட்டி, சட்டை, விளக்கு, வீட்டு உபயோகப் பொருட்களுடன், ஒரு வாக்குக்கு ரூ.2,000 வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீடுகள்தோறும் அதிமுக சார்பில் நேற்று ஒரு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வெற்றி பெற்றால் ரூ.5,000 மதிப்புள்ள பரிசுப்பொருள் அல்லது ரொக்கம், அரிசி மூட்டை வழங்கப்படும் என தெரிவித்து வருகின்றனர்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், 2017-ல் நடந்த இடைத்தேர்தலில், டிடிவி தினகரன் போட்டியிட்டபோது, வாக்காளர்களுக்கு 20 ரூபாய் நோட்டு ‘டோக்கன்’ போல வழங்கப்பட்டது. தேர்தல் வெற்றிக்கு பிறகு இந்த 20 ரூபாய் டோக்கனைக் கொடுத்து ரூ.2,000 பெற்றுக் கொள்ளலாம் என தகவல் பரவியது. அதனால், அவருக்கு அதிக வாக்குகள் விழுந்தன.
தேர்தலுக்கு முன்பு தரும் பணம், பொருட்களைத் தவிர, ‘டோக்கன்’ வாக்குறுதி மூலம் வாக்காளர்களை தங்கள் வசப்படுத்தி வாக்களிக்க வைக்கும் ‘ஆர்.கே.நகர் பார்முலா’வை இரு கட்சிகளும் தற்போது செயல்படுத்தியுள்ளன. இதனால், தங்களுக்கான வாக்கு சதவீதம் கூடும் என இரு கட்சிகளும் நம்புகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.