சென்னை: அண்ணா மேம்பாலம் அருகே, சாலை தடுப்பில் சொகுசு கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார். சென்னை பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் இருந்துபொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரி நோக்கி நேற்று முன்தினம் இரவு சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
காரை சேகில் குமார் (22) என்பவர் ஓட்டினார். முன்பக்க இருக்கையில் தனியார் கல்லூரி மாணவர் ஸ்ரேயாஸ் குப்தா (21) அமர்ந்திருந்தார். காரில்மேலும் சில மாணவர்களும் பின்இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
இந்நிலையில், அண்ணாசாலை வழியாக அதிவேகமாக சென்ற கார் கிண்டி மேம்பாலம் அருகே செல்லும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புசுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், முன் இருக்கையில் அமர்ந்திருந்த மாணவர் ஸ்ரேயாஸ் குப்தா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
காரை ஓட்டிய சேகில் குமார் மற்றும் பின் இருக்கையில் பயணித்தமாணவர்களும் பலத்த காயம்அடைந்தனர். தகவல் அறிந்து கிண்டி போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீஸார் நிகழ்விடம் விரைந்தனர்.
காயம் அடைந்த அனைவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதேபோல், உயிரிழந்த மாணவர் சடலமும் பிரேதப் பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.