ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வ.புதுப்பட்டி பேரூராட்சித் தலைவர், அவரது கணவர் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவர் வ.புதுப்பட்டி பேரூராட்சியில் டெங்கு ஒழிப்புப் பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் முத்துலட்சுமி பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இது குறித்து அவர் பிப்.1-ம் தேதி பேரூராட்சித் தலைவர் சுப்பு லட்சுமி வீட்டுக்குச் சென்று முறையிட்டார்.
அப்போது பேரூராட்சித் தலைவரின் கணவர் சாந்தாராம் தன்னை சாதியை குறிப்பிட்டு அவதூறாகப் பேசியதாகவும், பேரூராட்சித் தலைவர் தன்னை தாக்க முயன்றதாகவும் வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் முத்துலட்சுமி புகார் தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், பேரூராட்சித் தலைவர் சுப்புலட்சுமி, அவரது கணவர் சாந்தாராம் ஆகிய 2 பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.