விருதுநகர்: விருதுநகரில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தனியாருக்குச் சொந்தமான யானையை, மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி. ஆர்.சுவாமி நாதன் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த சேக்முகமதுவுக்குச் சொந்தமான 56 வயதான லலிதா என்ற பெண் யானை, கடந்த ஜனவரி 2-ம் தேதி விருதுநகரில் ஒரு கோயிலில் நடந்த விழாவுக்கு கொண்டுவரப்பட்டது. லாரியிலிருந்து யானையை இறக்கியபோது தடுமாறி விழுந் ததில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டன.
இதையடுத்து விழா முடிந்து மீண்டும் ராஜபாளையம் அழைத்துச்செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால், விருதுநகர் ரயில்வே காலனி முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் கட்டி வைக்கப்பட்டு லலிதா யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், யானைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், காயங்கள் ஆறாமல் உள்ளதால் யானை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விலங்குகள் நல ஆர்வலர்கள் புகார் எழுப்பினர்.
தொடர் புகார் காரணமாக இந்த யானையை வனத் துறையினர் கைப்பற்றி உரிய சிகிச்சை அளிக்குமாறு வனத்துறை தலைமை காட்டுயிர் பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி, மேகமலை வனச்சரக துணை இயக்குநர் திலீப்குமாருக்கு கடந்த வாரம் உத்தரவிட்டார். யானையைப் பராமரிப்பதற்கு ஆகும் செலவை யானையின் உரிமையாளரிடமிருந்து அபராத மாகப் பெறவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், விருதுநகரில் சிகிச்சை பெற்றுவரும் யானையை மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று பார்வையிட்டார். அப்போது, யானையின் பராமரிப்பு, தொடர் சிகிச்சைகள் குறித்தும் பாகன்களிடம் கேட்டறிந்தார். இதற்கிடையே, இந்த வழக்கை நீதிமன்றம் மீண்டும் எடுத்து விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே லலிதா யானை பராமரிப்பு குறித்து வனத்துறையினர் தொடர்ந்த வழக்கை விசாரித்தவர் நீதிபதி சுவாமிநாதன் என்பதும், அந்த வழக்கில், யானையை பாகனிடமிருந்து பிரித்து அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும், யானை தொடர்ந்து பாகனின் பராமரிப்பிலேயே இருக்கட்டும் என உத்தர விட்டதும் குறிப்பிடத்தக்கது.