மதுரை: மதுரை ஆவினிலிருந்து மாவட்டத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகவர்களுக்கு 50 வழித்தடங்கள் மூலம் பால் அனுப்பி வைக்கப்படுகிறது.
சமீப காலமாக மதுரை ஆவினில் இருந்து சரியான நேரத்தில் முகவர்களுக்கு பால் அனுப்புவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் பால் விற்க முடியவில்லை என முகவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் பால் பாக்கெட்டுகளை ஆவினுக்கே திருப்பி அனுப்புகின்றனர்.
விலை உயர்வுக்குப் பின் குறைந்த விலையுடைய பால் பாக்கெட்டுகளை மக்கள் அதிகம் வாங்குகின்றனர். ஆனால், குறைந்த விலை பாக்கெட்டுகளை ஆவின் நிர்வாகம் போதிய அளவு விநியோகிப்பது இல்லை. ஒவ்வொரு முகவரிடமும் குறைந்த எண்ணிக்கைக்குத்தான் பணம் செலுத்த வேண்டும் என வாய்மொழியாக அந்தந்த மண்டல அலுவலக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதுபோன்ற பிரச்சினையால் முகவர்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக முகவர்கள் சிலர் கூறியதாவது: பெரும்பாலும் அதிகாலை 5 மணிக் கெல்லாம் பால் வாங்க மக்கள் டெப்போக்களுக்கு வருகின்றனர். அதிகாலை 3 மணிக்குள் பால் வந்தால் மட்டுமே குறித்த நேரத்துக்குள் விற்பனை செய்ய முடியும்.
சில நாட்களில் பால் வாகனம், காலை 7 மணிக்குத்தான் வருகிறது. இதனால், அதிருப்தியில் மக்கள் தனியார் பால் பாக்கெட்டுகளை வாங்குகின்றனர். இதன் காரணமாக, வாடிக்கையாளர்களை தக்க வைக்க முடியாமல் தவிக்கிறோம். சில இடங்களில் தாமதமாக வரும் ஆவின் பால் வாகனத்தை திருப்பி அனுப்புகிறோம்.
இதற்கு அந்தந்த வழித்தட ஆவின் அதிகாரிகளும் காரணமாக இருக்கின்றனர். முகவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே உருவாகும் சிறு, சிறு பிரச்சினையால் தாமதம் ஏற்படுகிறது. இது தவிர, பால் பற்றாக்குறை ஏற்படும்போது, முகவர்களுக்கு தாமதமாக பால் கிடைக்கிறது. 3 மாதங்களுக்கு கெட்டுப் போகாத பால் பாக்கெட்டு களை கண்டிப்பாக வாங்க வேண்டும் என முகவர்களை வற்புறுத்துகின்றனர்.
இது போன்ற பிரச்சினைகளை ஆவின் நிர்வாகம் சரிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். ஆவின் நிறுவன ஊழியர்கள் சங்கத்தினரிடம் கேட்டபோது, ‘‘மதுரை ஆவினில் நிரந்தர ஊழியர்கள் போதிய அளவு இல்லை. 2 தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் மூலம் ஊழியர்களை நியமித்துள்ளன.
அவர்கள் சரியாக வேலை செய்வதில்லை. இவர்களிடம் நிர்வாகம்தான் வேலை வாங்க வேண்டும். ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.
ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியது: மதுரை மண்டலத்துக்கு தினமும் சுமார் 2 லட்சம் லிட்டர் பால் தேவை. ஆனால், 1.38 லட்சம் லிட்டர் மட்டுமே கொள் முதல் செய்யும் நிலையில் எஞ்சிய தேவைக்கு தேனி ஆவினில் கொள் முதல் செய்கிறோம். இது போன்ற நேரத்தில் முகவர்களுக்கு பால் விநியோகம் தாமதமாகலாம்.
போதிய அளவு பால் கிடைக்கும்போது, குறித்த நேரத்தில் முகவர்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட பால் பாக்கெட்டை மட்டும் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை. ஆவினில் ஊழியர் பற்றாக்குறை விரைவில் சரி செய்யப்படும் என்று கூறினர்.