காரைக்குடி: காரைக்குடி நகராட்சி திமுக கவுன்சிலர் வார்டில் நீண்ட நாட்களாக தேங்கியிருந்த கழிவுநீரை நகராட்சி நிர்வாகம் அகற்றாத நிலையில், அதிமுக கவுன்சிலர் தலைமையில் சமூக ஆர்வலர்கள் அகற்றினர். காரைக்குடி நகராட்சி 28-வது வார்டு கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த திவ்யா சக்தி உள்ளார்.
இந்த வார்டில் என்எஸ்கே. சாலையில் மழைநீர் வடிகாலும், பாலமும் ரூ.25 லட்சத்தில் அமைக்கப்பட்டது. மேலும் பாலப் பணிக்காக, மேற்குப் பகுதியில் தண்ணீர் வருவதைத் தடுக்க மண் தடுப்பு அமைக்கப்பட்டது. ஆனால், பாலப்பணி முடிவடைந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் தண்ணீருக்காக அமைக்கப்பட்ட மண் தடுப்பை அகற்றவில்லை.
இதனால், அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடாக உள்ளது. இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து 27-வது வார்டு அதிமுக கவுன்சிலரும், நமது உரிமை பாதுகாப்பு இயக்க தலைவரும் பிரகாஷ், பொறுப்பாளர் சிலம்பரசன் ஆகியோர் சமூக ஆர்வலர்கள் உதவியோடு கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
இது குறித்து கவுன்சிலர் பிரகாஷ் கூறுகையில், ‘காரைக்குடி நகராட்சியில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்து ஒப்பந்த தாரர்கள் பணிகளை முறையாக முடித்தார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் இங்குள்ள கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. உடனடியாக தூர் வாராவிட்டால் நகராட்சி அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்,’ என்றார்.