ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு, திமுக மற்றும் அதிமுக சார்பில் வீடுகள்தோறும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில இடங்களில் தங்கக் காசு மற்றும் மூக்குத்தி வழங்கப்பட்டுள்ளதால், வாக்காளர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை (27-ம் தேதி) நடக்கவுள்ளது. வாக்காளர்களைக் கவரும் வகையில், திமுக மற்றும் அதிமுகவினர் பணம் மற்றும் பல்வேறு பரிசுப்பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்கி வருகின்றனர். வீடுகள் தோறும், வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, திமுக சார்பில் ஒரு வாக்குக்கு ரூ,3000 வழங்கப்பட்டுள்ளது. அதோடு, குக்கர், ஸ்மார்ட் வாட்ச், வெள்ளி டம்ளர், ஹாட் பாக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், வேட்டி, சேலை உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதிமுக சார்பில் ஒரு வாக்குக்கு ரூ.2,000-ம் வழங்கப்பட்டுள்ளது. அதோடு, அகல்விளக்கு, வெள்ளி டம்ளர், பேன்ட், சட்டை உள்ளிட்ட பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. 2-ம் நாளாக நேற்றும் பட்டுச்சேலை, வெள்ளி அகல்விளக்கு, வெள்ளித் தட்டு உள்ளிட்ட பரிசுப்பொருள் விநியோகம் தொடர்ந்தது.
இந்நிலையில் திமுக மற்றும் அதிமுக சார்பில் இரண்டு வாக்குகளுக்கு மேல் உள்ள வீடுகளுக்கு ஒரு ‘டோக்கன்’ வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சிறப்புப் பரிசு வழங்கப்படும் என இரு தரப்பிலும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கச்சேரி சாலை பகுதியில் உள்ள வீடுகளுக்கு, ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, அன்னை சத்யா நகர், பிராமண பெரிய அக்ரஹாரம் பகுதிகளில் தங்க மூக்குத்தி வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்களிடையே இந்த விநியோகம் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் ஒருவருக்கொருவர், உங்கள் பகுதியில் டோக்கன் வழங்கப்பட்டதா, தங்கக்காசு வழங்கப்பட்டதா என விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள திமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு ஒரு வாக்குக்கு ரூ.5,000 வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ரூ.3,000 மட்டுமே வழங்கப்பட்டது.
இதனால் ஏற்பட்டுள்ள அதிருப்தியைப் போக்க, அனைத்து வாக்காளர்களுக்கும் ஒரே வகையான பொருளை வழங்குவதற்காக டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இது என்ன பொருள் என்பதும், எப்போது வழங்கப்படும் என்பதும் முடிவு செய்யப்படவில்லை.
ஒவ்வொரு பகுதியிலும் முகாமிட்டுள்ள அமைச்சர்கள், தங்களது வாக்குச்சாவடியில் வாக்குகளை அதிகரிக்க பல்வேறு பரிசுகளை வாக்காளர்களுக்கு வழங்கி வருகின்றனர். அந்த வகையில் சிலர் தங்கக்காசு மற்றும் மூக்குத்தி வழங்கியிருக்கலாம். அதிக வாக்குகளை பெறுவதில் அமைச்சர்களிடையே நிலவும் போட்டியே இது போன்ற குழப்பங்களுக்கு காரணம்'என்றனர்.
அதிமுக தரப்பில் வழங்கப்பட்ட டோக்கன்களுக்கு இன்று பரிசு வழங்கப்படவுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.