தமிழகம்

அனிதா தற்கொலையை அரசியலாக்குகிறது திமுக: தமிழிசை தாக்கு

தீபு செபாஸ்டின் எட்மண்ட்

அனிதாவின் தற்கொலையை திமுக அரசியலாக்குவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வால் மருத்துவ கனவு தகர்ந்ததால் மனமுடைந்த அரியலூர் மாணவி அனிதா கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மறைவை அடுத்து நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோரியும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் மாநிலம் முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அனிதாவின் தற்கொலைக்குப் பிந்தைய அரசியல் நிகழ்வுகள் குறித்து தி இந்து ஆங்கில நாளிதழுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டி பின்வருமாறு:

அனிதாவின் தற்கொலைக்குப் பின்னர் தமிழகத்தில் பாஜக கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.. ஆனால், நீங்கள் திமுகவை சாடும் போக்கை கையில் எடுத்துள்ளீர்களே..

இதன் பின்னால் எவ்வித அரசியலும் இல்லை. உயிரிழப்புகளை வைத்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என முன்னெடுத்து அரசியல் செய்வது திமுகவின் வரலாற்றில் இருக்கிறது. நீட் அமல்படுத்தப்பட்டால் மாணவர் போராட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் ஆரம்பத்திலிருந்தே கூறிவந்தார். ஆனால் தற்போது நீட் அடிப்படையிலான கலந்தாய்வு முடிந்துவிட்டது. திமுக எம்.எல்.ஏ., சிவசங்கரன் தான் மாணவி அனிதாவை உச்ச நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றார். உச்ச நீதிமன்றத்தில் அவர்களது வழக்கு எடுபடவில்லை. அதன்பின்னர் அனிதாவுக்கு மனரீதியாக திமுக பக்கபலமாக இருந்திருக்க வேண்டும். திமுகவின் அரசியல் செயல்பாடுகளால் அனிதா பாதிக்கப்பட்டிருந்தார். அனிதாவின் முடிவு திமுகவின் எண்ணம் எத்தகையது என்பதை உணர்த்தியிருக்கிறது. நீட்டை முன்வைத்து மிகப்பெரிய அளவிலான குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே திமுகவின் திட்டம். அதற்கு ஓர் உயிர் பலியானது பரிதாபம். இப்போது அனிதாவின் மரணத்தைவைத்து அரசியல் ஆதாயம் தேடுகிறது திமுக.

பிரதமருக்கு எதிரான போராட்டங்களால் பாஜகவின் பொறுமை சோதிக்கப்படுவதாக ட்வீட் செய்திருந்தீர்களே..

ஆம் செய்திருந்தேன். போராட்டக்காரர்களின் ஒட்டுமொத்த குறியும் எங்கள்மேல் தான் இருந்தது. யார் மீது வேண்டுமானாலும் நம் எதிர்ப்பை பதிவு செய்யலாம்.. ஆனால் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது அல்லவா? நீங்கள் எனது ட்விட்டர் டைம்லைனை பார்த்திருக்கவேண்டும். அனிதாவின் தற்கொலைக்கு பாஜக எவ்விதத்திலும் பொறுப்பாகாது.

நீட் தேர்விலிருந்து தமிழக அரசு விலக்கு கோரியபோது அதற்கு அவசர சட்டம் மூலம் ஒப்புதல் வழங்குவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ளாமல் இல்லை.

ஆனால், நீட் எதிர்ப்பாளர்களின் நோக்கம் நீட் எதிர்ப்பு மட்டுமல்ல. அவர்களுக்கு பிரதமரின் பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதே இலக்கு. அதன் காரணமாகவே நான் அவ்வாறு ட்வீட் செய்தேன். நீட் எப்படி மாநில அரசுகளுக்கு நன்மை பயக்கிறது? நீட் ஏன் அவசியம்? என்பவை குறித்து நீட் எதிர்ப்பாளர்களுக்கு எவ்வித புரிதலும் இல்லை. பிரதமருக்கு நீட் விவகாரத்தில் எவ்விதத் தொடர்பும் இல்லை. அப்புறம் ஏன் பிரதமர் புகைப்படத்தின் மீது அவர்கள் செருப்பு மாலை அணிவித்து போராட வேண்டும்?

இந்தக் கோபத்துக்கு நீட் மட்டும்தானா காரணம்?

நீட் அமல்படுத்தப்பட்டதற்கு மத்திய அரசு எவ்விதத்திலும் காரணம் இல்லை. உச்ச நீதிமன்றம்தான் நீட் தேர்வை அமலுக்கு கொண்டுவந்தது. நீட்டை அமல்படுத்தியதற்காக மக்கள் கோபம் கொள்ள வேண்டியது திமுக, காங்கிரஸ் கட்சிகள் மீதே. நீட்டை முன்மொழிந்ததே திமுகவும் காங்கிரஸும்தான். ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் பாஜக மீது பழி கூறியதுபோலவே தற்போது நீட் பிரச்சினையிலும் பாஜகவையே குறை கூறுகின்றனர். நீட் தேர்வை மத்திய அரசு கொண்டுவந்திருந்தால் முன்பு ஓராண்டுக்கு மட்டும் எப்படி விலக்கு அளிக்கப்பட்டது என்பதை உணர வேண்டும். ஒருவருட அவகாசம் போதுமானதே. எனவே, இப்போது காட்டப்படுவது எல்லாம் நீட்டுக்கு எதிரான கோப ஆவேசம் அல்ல பாஜகவுக்கு எதிரான உருவாக்கப்பட்டுள்ள எண்ண அலைகளே. தமிழகத்தில் பாஜக பலப்படுவதை விரும்பாதவர்களே இதைச் செய்கின்றனர்.

நீட் விவகாரத்தில் மாநில அரசின் பங்கை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மற்ற மாநிலங்கள் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டபோது தமிழக அரசும் அதனை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள உற்சாகப்படுத்தியிருக்க வேண்டும். மாணவர்களை இருளில் வைத்திருந்தது யார்? நீட் தேர்வை ஏதோ ஓர் அரக்கன் போல் எதிர்க்கட்சியினர் சித்தரித்ததாலேயே ஆளும் கட்சி அதை எதிர்க்க வேண்டியாயிற்று.

நீட் அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசு ஒத்துழைக்கும் என்று நிர்மலா சீதாராமன் உறுதியளித்தது சரிதானா? அவருக்கு தமிழக அரசியலில் ஏதாவது முக்கியப் பங்கு பணிக்கப்பட்டிருக்கிறதா?

அதைப் பற்றி நான் கருத்துகூற விரும்பவில்லை. நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவந்தது. அதன் காரணமாகவே நிர்மலா அத்தகைய கருத்தை முன்வைத்தார். ஆனால், நீட் விலக்கு சட்டபூர்வமாக சாத்தியம் இல்லை என்பது பின்னரே தெரிந்தது. நீட் சர்ச்சை குறித்து ஆய்வு செய்யும்படி அவருக்கு கட்சி மேலிட உத்தரவிருந்தது. நிர்மலா தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் தமிழக நலன் மீது அக்கறை கொண்டவர் என்பதாலும் அவருக்கு தமிழகம் சார்ந்த சில பணிகளை கட்சி ஒதுக்குகின்றது. இது வழக்கமான ஒன்றே.

SCROLL FOR NEXT