தமிழகம்

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது 3 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு: காட்பாடி அருகே பரிதாபம்

செய்திப்பிரிவு

காட்பாடி அருகே உள்ள கல்குவாரி யில் பிறந்தநாள் கொண்டாடச் சென்ற தனியார் கல்லூரி மாணவர்கள் 3 பேர், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்சங்கர்(19). இவர் சென்னை யில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவரது நண்பர்கள் காட்பாடியை அடுத்த கீழ்வடுகன்குட்டை பகுதியைச் சேர்ந்த ஹரிக்குமார்(19), வேலூர் கலாஸ்பாளையம் பகுதியைச் சேர்ந்த சித்தார்த்(19). இவர்கள் 2 பேரும் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பொறி யியல் படிப்பு படித்து வந்தனர்.

இவர்களது நண்பரான மேல் விஷாரத்தைச் சேர்ந்த பிராத்தம்(19) என்பவரின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட, 4 பேரும் காட்பாடி - திருவலம் சாலையில் உள்ள ஈசன் ஓடை கல்குவாரிக்கு நேற்று மதியம் சென்றனர். கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினர்.

அப்போது கையில் உள்ள ‘கேக்’ கிரீமை கழுவ கல்குவாரி பகுதிக்கு பிரவீன்சங்கர் சென்றுள்ளார்.

அவரை பின் தொடர்ந்து சித்தார்த் மற்றும் ஹரிகுமார் ஆகியோர் சென்றுள்ளனர். குட்டை நீரில் இறங்கி கை கழுவும்போது எதிர்பாராதவிதமாக பிரவீன்சங்கர் தவறி விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற சித்தார்த்தும், ஹரிகுமாரும் நீரில் இறங்கியபோது 3 பேரும் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.

மேலே நின்ற பிராத்தம் கூச்சலிட்டுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், அவரது கூச்சல் யாருக்கும் கேட்கவில்லை. உடனே அங்கிருந்து வெளியேறிய பிராத்தம் இதுகுறித்து காட்பாடி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் மாணிக்கவேல், காட்பாடி போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று குட்டை நீரில் மூழ்கிய கல்லூரி மாணவர்களை ஒரு மணி நேரம் கழித்து மீட்டனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்து அங்கு வந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவர்களின் சடலங்களைப் பார்த்துக் கதறி அழுதனர்.

SCROLL FOR NEXT