உச்ச நீதிமன்றம் | கோப்புப் படம் 
தமிழகம்

7 ஆண்டுகளில் 9 கோடி வழக்குகளுக்குத் தீர்வு: நீதித் துறை அகாடமி இயக்குநர் ஏ.பி.சாஹி தகவல்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கரோனா காலகட்டத்தை உள்ளடக்கிய கடந்த 7 ஆண்டுகளில் 9 கோடி வழக்குகளுக்கு இந்திய நீதித்துறை தீர்வு கண்டுள்ளதாக நீதித் துறை அகாடமியின் இயக்குநர் ஏ.பி.சாஹி தெரிவித்தார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு மாநில நீதித் துறை பயிற்சி மையத்தில் தேசிய நீதித் துறை அகாடமி மற்றும் தமிழ்நாடு மாநில நீதித் துறை அகாடமி சார்பில் சமகால நீதித் துறையின் வளர்ச்சிகள், சட்டம் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் நீதியை வலுப்படுத்துதல் தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ் ஒகா, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், தேசிய நீதித் துறை அகாடமியின் இயக்குநருமான நீதிபதி ஏ.பி.சாஹி, "உலகத்திலேயே சிறந்த நீதித் துறையாக இந்திய நீதித் துறை செயல்படுகிறது. கரோனா காலகட்டத்தை உள்ளடக்கிய 2016 முதல் 2022-ம் ஆண்டு வரையில் நாடு முழுவதும் தாக்கல் செய்யப்பட்ட 10 கோடி வழக்குகளில் 9 கோடி வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது" என்றார்.

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி டி .ராஜா பேசுகையில், "தேசிய நீதித் துறை பயிலகம், கரோனா காலகட்டதில் காணொலி காட்சி மூலம் 64 லட்சம் வழக்குகள் விசாரிக்கப்பட்டதில், சென்னை உயர் நீதிமன்றம் மட்டுமே 40 லட்சம் வழக்குகளை விசாரித்து உள்ளது. மாவட்ட நீதிபதிகளுக்கு பயிற்சி அளிப்பதில் தமிழ்நாடு மாநில நீதித்துறை பயிலகம் உலகத்திற்கு முன் மாதிரியாக திகழ்கிறது" என்றார்.

SCROLL FOR NEXT