கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை, கொள்ளை சம்பவத்தில் போலீஸாரால் தேடப்பட்ட கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் பலியான நிலையில், அவரது மனைவி, உறவினர்களிடம் நீலகிரி மாவட்ட எஸ்பி நேற்று விசாரணை நடத்தினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த சித்திரப்பாளையத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் மற்றும் கோடநாடு இல்லத்தில் கார் ஓட்டுநராக பணியில் இருந்தார்.
அதன் பின்னர் பணியில் இருந்து நீக்கப்பட்ட அவர், சென்னை வடபழனியில் மனைவி கலைவாணியுடன் வசித்து வந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்தார்.
மரணத்தில் மர்மம்
இந்நிலையில், ஆத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு கடந்த 28-ம் தேதி வந்திருந்த கனகராஜ், இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தென் னங்குடிபாளையத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கனகராஜின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது சகோதரர் தனபால் புகார் தெரிவித்தார். கனகராஜ் விபத்தில் உயிரிழந்தது குறித்து ஆத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கனகராஜின் சொந்த ஊருக்கு நீலகிரி மாவட்ட எஸ்பி முரளி ரம்பா தலைமையில் போலீஸார் நேற்று வந்தனர். கனக ராஜின் மனைவி கலைவாணி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். கனகராஜிடம் தொடர்பில் இருந்த வர்கள் யார்? கனகராஜ் கடந்த ஒரு மாதமாக எங்கெங்கு சென்று வந்தார் என்பன உள்ளிட்ட தகவல் களை சேகரித்தனர்.
மேலும், சென்னை வடபழனியில் கனகராஜ் வசித்து வந்த வீட்டுக்கும் சென்று விசாரணை நடத்த நீலகிரி மாவட்ட போலீஸார் முடிவு செய்துள்ளனர்.