தமிழகம்

மருத்துவப் பட்ட மேற்படிப்பு முதல்கட்ட கலந்தாய்வில் 97 சதவீத இடங்களை கைப்பற்றிய அரசு டாக்டர்கள்

செய்திப்பிரிவு

மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக் கான முதல்கட்ட கலந்தாய்வில் 97.3 சதவீத இடங்களை அரசு டாக்டர்கள் கைப்பற்றியுள்ளனர்.

தமிழகத்தில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) அடிப்படையில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் பிரிவுக்கான கலந்தாய்வு நடந்தது.

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 9-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி பகல் 2 மணி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 722 பேர் கல்லூரிகளில் சேருவதற்கான அனுமதிக் கடிதம் பெற்றனர். பிற்பகல் 3 மணிக்கு பிறகு பல் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான (எம்டிஎஸ்) கலந்தாய்வு நடைபெற்றது. இதில் 17 பேர் கல்லூரியில் சேருவதற் கான அனுமதிக் கடிதம் பெற்றனர். நேற்று முன்தினத்துடன் முதல்கட்ட கலந்தாய்வு முடிவடைந்தது.

கலந்தாய்வின் முடிவில் மருத்துவ பட்ட மேற்படிப்புகள் மற்றும் பட்டய மேற்படிப்பில் 40 இடங்கள், பல் மருத்துவ பட்டமேற்படிப்பில் 2 இடங்கள் காலியாக உள்ளன. இரண்டாம் கட்ட கலந்தாய்வு அடுத்த வாரம் தொடங்கவுள்ளது. அப்போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்கள், தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட்ட 722 மருத்துவப் பட்ட மேற்படிப்புகள் மற்றும் மருத்துவ பட்டய மேற்படிப்பு இடங்களில், 709 இடங்களை அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் டாக்டர்கள் கைப்பற்றினர். மற்றவர் கள் 13 இடங்களை கைப்பற்றியு ள்ளனர். அதேபோல் 17 பல் மருத் துவப் பட்ட மேற்படிப்பு இடங் களில், 10 இடங்களை அரசு பல் மருத்துவமனையில் பணி யாற்றி வரும் டாக்டர்கள் கைப்பற் றினர். மற்றவர்கள் 7 இடங்களை கைப்பற்றியுள்ளனர். முதல்கட்ட கலந்தாய்வில் அரசு டாக்டர்கள் 97.3 சதவீத இடங்களையும், மற்றவர்கள் 2.7 சதவீத இடங்களையும் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத் தக்கது.

சேவை மதிப்பெண்

இது தொடர்பாக மருத்துவ மாணவர் சேர்க்கைகுழு செயலாளர் செல்வராஜிடம் கேட்ட போது, “அரசு மருத்துவமனைகளில் பணியாற்றாத டாக்டர்கள் பெரும் பாலானோர் அகில இந்திய ஒதுக் கீட்டில் சேர்ந்துவிட்டனர். அதனால் தான் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளனர். அரசு டாக்டர்களுக்கு சேவைக்காக ஒரு ஆண்டுக்கு 10, இரண்டு ஆண்டுக்கு 20, மூன்று ஆண்டுக்கு 30 சதவீதம் என மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டதும் முக்கிய காரணமாகும்” என்றார்.

SCROLL FOR NEXT