தமிழகத்தில் வறட்சியின் காரண மாக விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ள வில்லை என்று உச்ச நீதிமன்றத் தில் தமிழக அரசு கூறியதாக வந்துள்ள செய்திகள் தமிழ்நாட்டு விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது.
தமிழகத்தில் தற்போது நிலவும் கடும் வறட்சி கடந்த 140 ஆண்டுகளில் இல்லாதது என கூறப்படுகிறது. இந்த வறட்சி யின் காரணமாக பயிர்கள் கருகிய தாலும், கடன் நெருக்கடியாலும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்தனர். சிலர் தற்கொலை செய்து கொண்டும், வேறு சில விவசாயிகள் அதிர்ச்சி யாலும் உயிரிழந்தனர். இவ்வாறு உயிரிழந்த 82 விவசாயிகளின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தமிழக அரசு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கியது.
இந்நிலையில் தமிழக விவசாயி களின் தற்கொலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க மேற்கொண்ட நடவடிக் கைகள் தொடர்பாக பதிலளிக்கு மாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டி ருந்தது.
இந்நிலையில் அண்மையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘தமிழகத்தில் நடைபெற்ற விவ சாயிகளின் தற்கொலைக்கு வறட்சி காரண மல்ல’ என தமிழக அரசு உச்ச நீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்துள்ள தாக செய்திகள் வெளியாயின. சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கே.பழனி சாமியும், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு மனி தாபிமான அடிப்படையிலேயே நிவாரண நிதி வழங்கப்பட்டது என கூறியுள்ளார்.
இந்த செய்திகளை அறிந்து தமிழக விவசாயிகள் கடும் வேதனையும், கொந்தளிப்பும் அடைந்துள்ளனர். இது தொடர் பாக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் சிலர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:
கே.பாலகிருஷ்ணன் முன்னாள் எம்.எல்.ஏ., (தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர்):
தமிழ்நாட்டில் யார் ஆட்சியில் இருந்தாலும் வறட்சியின் காரண மாக விவசாயிகள் உயிரிழக்கும் சம்பவங்களை மூடி மறைக்கும் போக்கு தொடர்ந்து நீடிக்கிறது. வறட்சியால் உயிரிழந்த காரணத்தால்தான் 82 விவசாயி களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி வழங்கி யதே தவிர, வேறு சொந்த பிரச்சினைகளால் உயிரிழந்தவர் களுக்கு நிதி வழங்கவில்லை.
வறட்சியின் பாதிப்பு பற்றிய இந்த உண்மை நிலைகளுக்கு முரணான தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறி யுள்ளது. இது தமிழக விவசாயி களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.
மன்னார்குடி எஸ்.ரங்கநாதன் (காவிரி டெல்டா பாசனப் பகுதிகள் விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர்):
தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி ஏற்பட்டுள்ளதாக கூறும் தமிழக அரசு, மத்திய அரசிடமிருந்து பல்லாயிரம் கோடி நிவாரண நிதி கோரியுள்ளது. வறட்சியால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் என்று கூறி தலா ரூ.3 லட்சம் நிதியும் வழங்கியது. உண்மை இவ்வாறு இருக்க, திடீரென வறட்சியால் யாரும் சாகவில்லை என உச்ச நீதிமன்றத்திலேயே தமிழக அரசு சொல்வது என்பதை ஏற்க முடியாது. தமிழக அரசு கூறுவது பெரும் பொய். தமிழக அரசு இவ்வாறு கூறுவது மாநிலத் தின் நலனை பெரிதும் பாதிக்கும்.
பி.ஆர்.பாண்டியன் (தமிழ் நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப் பாளர்):
வறட்சி பாதிப்பால் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சி யாலும் உயிரிழக்கும் விவசாயிகள் மரணங்கள் பற்றி தமிழக அரசு முறையாக கணக்கெடுத்து பதிவு செய்ய வேண்டும். விவசாயிகளின் இத்தகைய மரணங்கள் பற்றி மத்திய அரசுக்கு முறையாக தெரியப்படுத்த வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு அதனை செய்ய வில்லை. உச்ச நீதிமன்றம் கேட்ட பிறகாவது வறட்சியால் உயிரிழந்த விவசாயிகள் பற்றிய விவரங்களை தெரிவித்திருக்கலாம். மாறாக, வறட்சியால் இங்கு யாரும் சாக வில்லை என நமது மாநில அரசே கூறுவது என்பது தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியும், துரோகமும் ஆகும். அது மட்டுமல்ல; உண் மைக்கு மாறான தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் கூறியதன் மூலம் நமக்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்பட்டுள்ளது என்றே கருத வேண்டியுள்ளது.
விவசாய சங்க பிரதிநிதிகளின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து தமிழக வேளாண்மைத் துறை உயர் அதிகாரிகள் சிலரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:
1874-ம் ஆண்டுக்குப் பிறகு மிக மோசமான வறட்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. இந்த வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்குவதிலும், பயிர் காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தருவதிலும் தமிழக அரசு தீவிரமான நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளது.
இதற்கிடையே வறட்சியின் காரணமாக பயிர்கள் பாதிக்கப் பட்டு, அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி யால் விவசாயிகள் உயிரிழந்துள்ள தாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தருமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. மாவட்ட ஆட்சியர்கள் உரிய விசாரணை நடத்தி, அவர்கள் அளித்த பரிந் துரையின் அடிப்படையில், உயிர் இழந்த விவசாயிகள் 17 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது. அதேபோல் பல்வேறு காரணங்களால் உயிர் இழந்த மேலும் 65 விவசாயிகளின் குடும்பங்களுக்கும், அவர்களின் வறிய நிலையை கருத்தில் கொண்டு நிவாரண நிதி தரப்பட்டது. இந்த தகவல்கள்தான் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
வறட்சியால் விவசாயிகள் யாரும் சாகவில்லை என்றோ அல்லது வறட்சியால்தான் விவ சாயிகள் உயிரிழந்தனர் என்றோ தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் எதுவும் தெரிவிக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நமக்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகம், வறட்சியின் காரணமாக கர்நாடகத்தில் ஏராள மான விவசாயிகள் உயிரிழந்து விட்டனர் என உச்ச நீதிமன்றத் திலும், மத்திய அரசிடமும் திரும்ப திரும்ப அதிகாரபூர்வமான தகவல்களுடன் கூறி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் நடைபெற்ற விவசாயிகளின் மரணங்கள் தொடர்பான தகவல்களை தமிழக அரசு அதிகாரபூர்வமாக வெளி யிடவில்லை. அது மட்டுமின்றி, அந்த சம்பவங்களையே மூடி மறைக்க நமது அரசு முயல்வது ஏன் என்பதே தற்போது விவசாயிகள் எழுப்பும் பிரதான கேள்வியாக உள்ளது.