புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களில் 50 சதவீதம் மத்திய அரசின் உத்தரவுப்படி இந்த ஆண்டு பெறப்பட்டது.
அதாவது தனியார் மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை மருத்துவத்தில் மொத்தமுள்ள 315 இடங்களில் 159 இடங்களும், முதுநிலை பட்டயப்படிப்பில் 30ல் 12 இடங்களும், முதுநிலை பல் மருத்துவத்தில் 40ல் 20 இடங்களும் அரசு இட ஒதுக்கீடாக பெறப்பட்டுள்ளது. இளநிலை (எம்பிபிஎஸ்) படிப்பிற்கு 1050 இடங்கள் உள்ளன.
தனியார் மருத்துவ கல்லூரிகளில் கிளினிக்கல் முதுநிலை மருத்துவ படிப்பிற்கு அரசு ஒதுக்கீடு இடத்திற்கு ரூ.5.50 லட்சமும், நிர்வாக ஒதுக்கீடு இடத்திற்கு ரூ.14 லட்சமும், நான் கிளினிக்கல் படிப்பிற்கு அரசு ஒதுக்கீடு இடத்திற்கு ரூ.4.50 லட்சமும், நிர்வாக இடத்திற்கு ரூ.6 லட்சமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோல் பல் மருத்துவ படிப்புக்கு கிளினிக்கல் படிப்பிற்கு ரூ.4.50 லட்சம், ரூ.11 லட்சம், நான் கிளினிக்கல் படிப்புக்கு ரூ.4 லட்சம் ரூ.6 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான முதல் கட்ட கலந்தாய்வில் 88 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் இவர்களை அரசு கட்டணக்குழு நிர்ணயித்ததன் அடிப்படையில் சேர்க்க தனியார் கல்லூரி நிர்வாகங்கள் மறுத்து வருகின்றன. கல்லூரிகளில் மாணவர்கள் சேர்த்து கொள்ள இன்று இறுதிநாளாகும். இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆளுநர் கிரண்பேடியிடம் தெரிவித்து இருந்தனர்.
சரமாரி கேள்வி
இந்நிலையில் நேற்று இரண்டாம் கட்ட கலந்தாய்வு காலாப்பட்டில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் நடைபெற்றது. இதை அறிந்த ஆளுநர் கிரண்பேடி நேற்று காலை 10 மணிக்கு சென்டாக் அலுவலகத்துக்கு சென்றார்.
முதல் கட்ட சென்டாக் கலந்தாய்வில் கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டனரா? என்ற கேள்வியை அதிகாரிகளிடம் கேட்டார். அதற்கு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து அப்போது எதற்காக கலந்தாய்வு நடத்துகிறீர்கள்? நீங்கள் தேர்வு செய்து அனுப்பிய மாணவர்கள் கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு சென்டாக் எடுத்த நடவடிக்கை என்ன? எதனால் சேர்த்துக் கொள்ளப்படவில்லை? சென்டாக் ஏழை மாணவர்கள் பயன்பாட்டிற்கு உள்ளதா? அல்லது வசதி படைத்தவர்களின் பிள்ளைகள் குறுக்கு வழியில் மருத்துவ படிப்பில் சேர்ந்து படிப்பதற்கு உதவுவதற்கு உள்ளதா? என்று பல்வேறு கேள்விகளை சரமாரியாக எழுப்பினார்.
ஆளுநரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அங்கு இருந்த சென்டாக் அதிகாரிகள் திணறினர். அங்கிருந்தோர் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சுகாதாரத்துறை செயலர் பாபு, இயக்குநர் ராமன் உள்ளிட்ட அதிகாரிகள் சென்டாக் அலுவலகத்துக்கு வந்தனர்.
அனைவரிடமும் மாலைக்குள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் சென்டாக் தேர்வு செய்த மாணவர்களை கட்டண குழு நிர்ணயம் செய்த கட்டணத்தில் தனியார் கல்லூரிகள் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்டாக் அலுவலகத்திலேயே அமர்ந்திருந்தார்.
அதைத்தொடர்ந்து மாணவர் சேர்க்கை விவரம், கல்வி கட்டண நிர்ணயம், தனியார் மருத்துவக்கல்லூரிகள் அளித்துள்ள கடிதங்கள் போன்றவற்றினை ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு இடம் அளிக்காத மருத்துவக்கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சென்டாக் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
பிற்பகலில் சென்டாக் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கோவிந்தராஜ், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிராஜா ஆகியோரை மாணவர்கள், பெற்றோர் மத்தியில் அழைத்த ஆளுநர் கிரண்பேடி, அரசு ஒதுக்கீட்டு இடங்கள் குறித்த விவரங்களை தருமாறு கேட்டார்.
அவர்கள் முதலில் சரியான விவரங்களை தரவில்லை. இதனால் கோபமுற்ற ஆளுநர் மாப் அப் (அரசு காலியிடங்களையும் இணைத்து அடுத்த கலந்தாய்வுக்கு அளிப்பது) கலந்தாய்வுக்கு அரசு இடங்கள் ஒதுக்கப்பட்டதை ரத்து செய்வதாக அறிவித்தார். பின்னர் 71 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளதாக சென்டாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து கிரண்பேடி கூறுகையில், "50 சதவீத அரசு இடங்கள் மக்களுக்கே உரியவை. யூனியன் பிரதேச தலைமை நிர்வாகி என்ற முறையில் மீண்டும் கலந்தாய்வை நடத்த உத்தரவிடுகிறேன். பணிவிதிகளின்படி, இந்த பிரச்சினையில் ஆளுநரின் முடிவே இறுதியானது.
71 இடங்களுக்கு நாளை (இன்று) காலை 9 மணிக்கே கலந்தாய்வை தொடங்க வேண்டும். இதில் ஏதாவது முறைகேடு செய்தால் தொடர்புடைய சென்டாக் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்படுவார். துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரித்தார்.
பின்னர் சென்டாக் அலுவலகத்திலேயே கலந்தாய்வுக்கான எழுத்துபூர்வமான ஆணையை ஆளுநர் கிரண்பேடி அளித்தார்.
தொடர்ந்து ஆளுநர் உத்தரவுப்படி இன்று காலை 9 மணிக்கு சென்டாக் கலந்தாய்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பை சென்டாக் தரப்பில் வெளியிட்டனர். சிறிது நேரத்திலேயே கலந்தாய்வு நடத்த அரசு ஒப்புதல் வரவில்லை. அதனால் கலந்தாய்வு நடத்தும் அறிவிப்பை வெளியிட வேண்டாம் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் இதுதொடர்பான தகவல் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக துறை உயர் அதிகாரிகளை அழைத்து இதுதொடர்பாக விசாரித்தார். அதைத்தொடர்ந்து நேற்று இரவு சென்டாக் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கோவிந்தராஜ் வெளியிட்ட அறிவிப்பில், "சென்டாக் கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு சரியாக தொடங்கும். காலம் குறைவாக இருப்பதால் பங்கேற்போர் சான்றிதழ்கள் அனைத்துடனும் வருவது அவசியம்" என்று தெரிவித்துள்ளார்.