பழநி: பழநி, ஒட்டன்சத்திரம் வனப்பகுதி யில் தீப்பிடிப்பதை தடுக்க 51 கி.மீ. தூரத்துக்கு தீத்தடுப்புக் கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பழநி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான மூலிகைகள், அரிய வகையான மரங்கள் உள்ளன. ஏராளமான விலங்குகள் வசிக் கின்றன. பல ஆயிரம் ஏக்கரில் மலைப்பயிர் சாகுபடி நடக்கிறது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே பகலில் வெயில் வாட்டி வருகிறது. அதனால் வனப்பகுதியில் உள்ள மரங்கள், செடிகள் தண்ணீரின்றி வாடி வருகின்றன. சருகுகளில் தீப்பற்றி வனப்பகுதியில் அவ்வப்போது காட்டுத்தீ பரவி வருகிறது.
இதைத் தடுக்க பழநி வனப்பகுதியில் 36 கி.மீ. தூரம், ஒட்டன்|சத்திரம் வனப்பகுதியில் 15 கி.மீ. தூரம் என மொத்தம் 51 கி.மீ. தொலைவுக்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்படுகின்றன.
இதுமட்டுமின்றி செயற்கைக் கோள் உதவியுடன் புவிசார் தகவல் அமைப்புகளின் (ஜிஐஎஸ்) மூலம் வனப்பகுதியில் தீ பரவும் இடத்தை துல்லியமாக அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வனப்பகுதியில் தீ பரவுவதை தடுக்க மலைவாழ் மக்களில் சிலரை தீத்தடுப்பு காவலர்களாக நியமித்து 24 மணி நேரமும் கண்காணிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.