அரவக்குறிச்சி எம்எல்ஏ வி.செந்தில் பாலாஜி உண்ணாவிரதம் இருக்க மீண்டும் அனுமதி கேட்ட அதே நாளில் அதே இடத்தில் கரூர் நகர அதிமுக செயலாளர் வை.நெடுஞ் செழியனும் உண்ணாவிரதம் இருக்க மீண்டும் அனுமதி கோரி எஸ்பியிடம் கடிதம் அளித்துள்ளார்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரியை வாங்கல் குப்புச்சி பாளையத்தில் அமைக்க வலியு றுத்தி ஏப்ரல் 28-ல் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருக்க அரவக்குறிச்சி எம்எல்ஏ வி.செந்தில்பாலாஜி கடந்த ஏப்ரல் 20-ல் ஆட்சியர், எஸ்பி ஆகியோரிடம் கடிதம் அளித்தார்.
இதையடுத்து, அதிமுக நகரச் செயலாளர் வை.நெடுஞ்செழியன் தலைமையில் அதிமுகவினர் வி.செந்தில்பாலாஜி அனுமதி கேட்ட அதே ஏப்ரல் 28-ல், கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் சணப்பிரட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி எஸ்பி அலுவகத்தில் மனு அளித்தனர்.
மேலும், சணப்பிரட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்தி கரூர் பேருந்து நிலையம் தென்பகுதியில் ஏப்ரல் 28-ல் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு சணப்பிரட்டி பகுதி மக்கள் ஏப்ரல் 24-ல் எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளித்தனர்.
சணப்பிரட்டியில் அரசு மருத் துவக் கல்லூரியை அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 26-ல் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம்.கீதா தலைமையில் அதிமுக நகரச் செயலாளர், மாவட்ட அவைத் தலைவர் காளியப்பன், வர்த்தகர்கள், பொதுமக்கள் அரசு கலைக் கல்லூரியில் இருந்து பேரணியாக சென்று ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ஏப்ரல் 28-ல் உண்ணாவிரதத் துக்கு அனுமதி வழங்கப்படாததை அடுத்து, உண்ணாவிரதம் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி எம்எல்ஏ செந்தில்பாலாஜி ஏப்ரல் 25-ல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதில் ஏப்ரல் 28-ல் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டதால், ஏப்.28-ல் நடத்துவதாக இருந்த உண்ணாவிரதத்தை ஒத்திவைப்பதாக செந்தில்பாலாஜி ஏப்.26-ல் அறிவித்தார்.
வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஏப்.28-ல் விசாரணைக்கு வந்தபோது, உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி புதிதாக கடிதம் அளிக்க செந்தில்பாலாஜிக்கும், 2 நாட்களில் அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக் கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் மே 5-ல் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி செந்தில்பாலாஜி கரூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏப்.28-ல் கடிதம் அளித்தார்.
இந்நிலையில், கரூர் சணப் பிரட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மே 5-ல் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி கரூர் எஸ்பியிடம் அதிமுக கரூர் நகரச் செயலாளர் வை.நெடுஞ்செழியன் நேற்று கடிதம் அளித்துள்ளார்.