வேலூர்: 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரித் துள்ளார்.
தமிழகத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லாது என்ற வதந்தி மக்களிடையே திடீரென பரவியது. 10 ரூபாய் நாணயங்கள் செல்லத்தக்கது என ரிசர்வ் வங்கி பலமுறை அறிவித்தும் வியாபாரிகளிடமும், மக்களிடமும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை.
வேலூரில் சுற்றுலா பயணிகள் மற்றும் சிகிச்சைக்காக தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங் களை சேர்ந்தவர்கள் பலர் வருகின்றனர். இங்குள்ள 300-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் சுமார் 15 ஆயிரம் வட மாநிலத்தவர்கள் தங்கி உள்ளனர். வேலூருக்கு வரும் வெளியூர் மக்கள் 10 ரூபாய் நாணயத்தை கையில் வைத்து கொண்டு அலைகின்றனர்.
இங்குள்ள சிறு வியாபாரிகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பெரும்பாலான இடங்களில் 10, 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர்.
வாய் தகராறு... ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கூட இந்த நிலை நீடிக்கிறது. இந்த 10 ரூபாய் நாணயத்தால் பல பேருந்துகளில் நடத்துநர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே வாய் தகராறும் ஏற்படுவ துண்டு. வியாபாரிகள் தரப்பில் விசாரித்தபோது, கடைக்கு வரும் பொதுமக்கள் 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதில்லை.
அவர்கள் வாங்க தொடங்கினால் நாங்களும் வாங்கி விடுவோம் என கூறுகின்றனர். ஆனால், பொதுமக்கள் தரப்பில் வியா பாரிகள் வாங்கவில்லை அவர்கள் வாங்கினால் நாங்களும் வாங்க தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவிக்கின்றனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 10, 20 ரூபாய் நாணயம் தொடர்பாக பிரச்சினையில் வியாபாரிகளும், பொதுமக்களும் ஒருவரை ஒருவர் மாறி, மாறி குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதற்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும், பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு அதிக அளவில் வெளியிட்டுள்ளன. மேலும், 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தியால் சில வியாபாரிகள், வாங்க மறுப்பதாக தெரியவருகிறது, இது வெறும் வதந்திதான்.
10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும். அனைத்து வங்கிகளிலும் அரசாங்க அலுவலகம் 10,20 ரூபாய் நாணயங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கெனவே விளக்கமளித்துள்ளது. எனவே, 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் எந்தவிதமான தயக்கமின்றி 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை ஏற்றுக்கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.