தமிழகம்

வடபழனி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதி: முதல்வர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

வடபழனி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னை வடபழனி, தெற்கு பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் இன்று அதிகாலையில் மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில், கும்பகோணம் என்பவரின் மனைவி மீனாட்சி, தட்சணாமூர்த்தி என்பவரின் மனைவி செல்வி, சந்துரு என்பவரின் மகள் சாலினி, நாராயணன் என்பவரின் மகன் சஞ்சய் ஆகிய நான்கு நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

மேற்கண்ட துயர சம்பவத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விபத்தில் எட்டு நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க சென்னை மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்'' என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT