சுனாமி தாக்குதலின்போது பாதிக்கப்பட்ட மக்களை திமுக தலைவர் கருணாநிதி சந்திக்கவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். இதற்கு பதிலளிக்க வாய்ப்பு வழங்காததால் திமுகவினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை மானியக் கோரிக்கை மீது செவ்வாய்க்கிழமை நடந்த விவாதம் வருமாறு:
புஷ்பலீலா ஆல்பன் (திமுக):
சமூக நலத்துறையில் பல்வேறு திட்டங்களை திமுக தலைவர் கருணாநிதி செயல்படுத்தி உள்ளார்
அமைச்சர் வளர்மதி:
சமூக நலத்துறை என்னவோ அவருக்கே சொந்தம் என்பதுபோல் உறுப்பினர் பேசுகிறார். சமூக நலத்துறை என்றாலே அது நம் முதல்வர்தான். அன்னை தெரசாவே அவரது வீட்டுக்கு நேரில் வந்து, ‘‘நான் செய்ய நினைப்பதையெல்லாம் செய்கிறீர்களே’ என பாராட்டி விட்டுச் சென்றார். மகளிருக்கு உங்கள் கட்சி கொடுக்கும் மரியாதை, இதே சட்டமன்றத்தில் நீங்கள் நடந்து கொண்டதை வைத்தே அறியமுடியும். அது ஒன்றே போதும்.
புஷ்ப லீலா:
மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு…
அமைச்சர் வளர்மதி:
வராத இந்த திட்டத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் சொல்லிக் கொண்டிருப்பீர்கள். இதை கட்சியிலேயே செயல்படுத்தாதவர்கள் நீங்கள். அதிமுகவில் பெண்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. மகளிர் சுயஉதவிக் குழுக்களை நீங்கள் கொண்டு வந்ததுபோல் பேசுகிறீர்கள். அதைத் தொடங்கியவர் முதல்வர்தான்.
புஷ்பலீலா:
சுனாமியால் பாதித்தோருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு…
அமைச்சர் வளர்மதி: சுனாமி தாக்கியபோது நீங்கள் ஆட்சியிலேயே இல்லை. சுனாமி தாக்கியதும் நேரடியாக சென்று பார்வையிட்டு, மக்களுக்கு முதல்வர்தான் உதவி செய்தார். உங்கள் தலைவரோ தனியார் மருத்துவமனையில் போய் அட்மிட் ஆகிவிட்டார்.
அப்போது திமுக உறுப்பினர் துரைமுருகன் எழுந்து பேச முயன்றார்.
(குறுக்கிட்டு): 2004-ல் நான் முதல்வராக இருந்தேன். தமிழகம் முழுவதும் சென்று சுனாமியால் பாதித்தவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தேன். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினேன். ஆனால், திமுக தலைவரோ சென்னையில் இருந்துகொண்டே எங்கும் போகவில்லை. அவரது தொகுதியான சேப்பாக்கம்கூட சுனாமியால் பாதிக்கப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா
(அப்போது திமுக உறுப்பினர் அன்பழகன் ஏதோ கூறினார். துரைமுருகன் பேச தொடர்ந்து வாய்ப்பு கேட்டார். பதிலுக்கு அதிமுகவினரும் குரல் கொடுத்ததால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. பேரவைத் தலைவர் கண்டித்தும் திமுக உறுப்பினர்கள் நின்றுகொண்டே கூச்சலிட்டபடி இருந்தனர்)
முதல்வர்:
திமுக உறுப்பினர்கள் விதிமுறைகளை அறியாதவர்கள் அல்ல. ஒரு உறுப்பினர் பேசும்போது முதல்வரோ, அமைச்சரோ குறுக்கிட்டுப் பேசலாம். அதன்பிறகு அந்த உறுப்பினர்தான் மீண்டும் பேச வேண்டும். அவர்கள் கட்சியில் உள்ள மற்றவர்கள் பேசக்கூடாது.
அப்போது துரைமுருகன் மீண்டும் எழுந்து பேச முயன்றார். அவருக்கு அனுமதி மறுத்த பேரவைத் தலைவர், புஷ்பலீலா தொடர்ந்து பேச வேண்டும் எனக் கூறினார். இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.