உதகை: உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்கறிஞர்களுக்கான அறைக்கு திடீரென ‘சீல்' வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த காக்கா தோப்பு பகுதியில் திறக்கப்பட்ட புதிய நீதிமன்ற வளாகத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப் படவில்லை. குறிப்பாக, சாலை, தண்ணீர்உட்பட மக்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக, மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடமும் முறையிட்டனர். அதன்பேரில், நீலகிரி மாவட்ட பொறுப்பு நீதிபதிகள் வேலுமணி, சத்திய நாராயணன் ஆகியோர், புதிய நீதிமன்ற வளாகத்தை ஆய்வு செய்தனர். பின்னர்,பெண் வழக்கறிஞர்களுக்கு தனி அறையை திறந்து வைத்தனர். இந்நிலையில், அந்த அறை நேற்று முன்தினம் இரவு திடீரென பூட்டி ‘சீல்' வைக்கப்பட்டது.
இதனால், புதிய நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்கறிஞர்கள் நேற்று கூடி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, "புதிய நீதிமன்ற வளாகத்தில் போதிய வசதிகள் இல்லை எனக் கூறி, வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டோம். தலைமை நீதிபதியிடம் முறையிட்டோம். அதன் பின்னர் எங்களுக்கு அறை ஒதுக்கப்பட்டது.
ஆனால், மாவட்ட நீதிபதி திடீரென அந்த அறையை பூட்டி ‘சீல்' வைத்துள்ளார். தற்போது நாங்கள் நடுத்தெருவில் நிற்கிறோம். அறையை திறக்க மாவட்ட நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும், தலைமை நீதிபதியிடமும் முறையிட உள்ளோம். பெண் வழக்கறிஞர்களை இழிவு படுத்தி மாவட்ட நீதிபதி பேசுகிறார். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆன்லைனில் புகார் அளித்துள்ளோம்" என்றனர்.