தமிழகம்

ஈரோட்டில் நாளை முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்; பழனிசாமி இன்று வாக்கு சேகரிப்பு

செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் 24, 25-ம் தேதிகளில் (இன்று, நாளை) முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பிரச்சார சுற்றுப்பயணம் தற்போது ஒரு நாளாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை (25-ம் தேதி) ஒரு நாள் மட்டும் முதல்வர் முக ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஈரோடு சம்பத் நகரில் நாளை காலை 9 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கும் முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து பெரியவலசு, பாரதி தியேட்டர் சாலை, பேருந்து நிலையம், மஜித் வீதி வழியாக கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே காலை 10 மணிக்கு பேசவுள்ளார்.

தொடர்ந்து கே.என்.கே. சாலை, மூலப்பட்டறை வழியாக பிராமண பெரிய அக்ரஹாரம் செல்லும் முதல்வர், அங்கு காலை 11 மணிக்கு பேசுகிறார். தொடர்ந்து, சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகைக்கு திரும்புகிறார். மாலை 3 மணிக்கு முனிசிபல் காலனியில் பேசும் முதல்வர் ஸ்டாலின், பன்னீர் செல்வம் பூங்கா வழியாக பெரியார் நகர் சென்று மாலை 3.45 மணிக்கு தனது பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.

பழனிசாமி பிரச்சாரம்: இதேபோல், இன்று (24-ம் தேதி) மாலை 5 மணிக்கு பிராமண பெரிய அக்ரஹாரத்தில் வரவேற்பை ஏற்கும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி, அங்கிருந்து காவிரி சாலை, திருநகர் காலனி, ஸ்வஸ்திக் கார்னர், பன்னீர்செல்வம் பூங்கா வழியாக கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே பேசுகிறார்.

நாளை (25-ம் தேதி) பகல் 12 மணிக்கு குருசாமி கவுண்டர் மண்டபத்தில் பிரச்சாரத்தை தொடங்கும் பழனிசாமி, இடையன்காட்டு வலசு, மணிக்கூண்டு வழியாக பெரியார் நகர் ஆர்ச் அருகே பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.

SCROLL FOR NEXT