இந்திய விமானப்படை ஏர்மேன் பணி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 10 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் என்.சுப்பையன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய விமானப் படையின் ஏர்மேன் பணிக்கு ஆள் சேர்ப்பு முகாம் வரும் செப்டம்பரில் வேலூரில் நடக்கவுள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்பும் மனுதாரர்கள் 12-ம் வகுப்பு தேர்வில் 50 சதவீத மதிப்பெண்ணும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருத்தல் வேண்டும். மேலும் 7-7-1997 மற்றும் 20-12-2000-க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை, வேலூர், கோவை, சேலம், திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், மதுரை, நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய 10 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நடக்கவுள்ளன. சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பாடக் குறிப்புகளுடன் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். இதில் ஏர்மேன் ரெக்ரூட்மென்ட் போர்டு அலுவலர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குவர்.
பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள், மேற்கண்ட 10 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏதேனும் ஒரு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.