உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, கன்னியாகுமரியில் நெடுஞ்சாலையோரமுள்ள டாஸ்மாக் கடைகள் முழுவதும் அகற்றப்பட்டு விட்டன. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு தொல்லை தீர்ந்தது. இதே நிலை இனி வரும் காலங்களிலும் தொடர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி பல வரலாறுகளை தன்னகத்தே கொண்டது. இந்தியாவின் தொடக்கப் புள்ளி யான இங்கு, ‘கள் உண்ணாமை’ என்னும் அதிகாரத்தை படைத்த திருவள்ளுவருக்கு கடல் நடுவே 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. மதுவை எதிர்த்த காந்திக்கும், எட்டாக்கனியாக இருந்த கல்வியை ஏழைகளுக்கு கிடைக்கச் செய்த காமராஜருக்கும் இங்கு நினைவு மண்டபங்கள் உள்ளன.
ஆன்மிகத்தின் மகிமையை உலகுக்கு உணர்த்திய சுவாமி விவேகானந்தருக்கு கடல் நடுவே உள்ள பாறையில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. விவேகானந்த கேந்திரம், பகவதி அம்மன் கோயில் என கன்னியாகுமரியின் சிறப்புகள் எண்ணிலடங்காதவை.
சுற்றுலா பயணிகள் அதிருப்தி
ஆனால், இவற்றுக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக, இங்கு மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி பேருந்து நிலையத்தில் இறங்கியதுமே, முகப்பு பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்ததே இதற்கு காரணம். மது போதையில் அட்டகாசம் செய்யும் நபர்களால் சுற்றுலாப் பயணிகள் பாதிப்பை எதிர் கொண்டனர்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, பகவதியம்மன் கோயிலுக்கு மிக அருகாமையில் இருந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டுள்ளது. மேலும், விவேகானந்தபுரம் சந்திப்பு, மகாதானபுரம் சந்திப்பு பகுதியிலிருந்த மதுக்கடைகளும் அகற்றப்பட்டுள்ளன. தமிழக அரசின் சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான தமிழ்நாடு ஹோட்டலில் செயல்பட்ட மதுக்கூடம், தனியார் நட்சத்திர விடுதிகளில் அமைந்திருந்த 10-க்கும் மேற்பட்ட மதுக்கூடங்களுக்கும் தற்போது `சீல்’ வைக்கப்பட்டுள்ளன.
வேதனையே மிஞ்சியது
சமூகப் போராளி தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லா கூறும்போது, ``கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அருகில் எங்களது அமைதி இல்லம் உள்ளது. இங்கு சமூக தளத்தில் இயங்குவோரைக் கொண்டு கூட்டம் நடத்துவது வழக்கம். இதற்கு வழி சொல்வதற்குக் கூட பேருந்து நிலையத்தில் இருந்து டாஸ்மாக் கடை தாண்டி வாருங்கள் என்று சொல்லும் நிலை இருந்தது.
காலம் முழுவதும் மதுவுக்கு எதிராக போராடி விட்டு, முகவரிக்கே மதுக்கடையை அடையாளம் சொல்வது வேதனை தந்தது. உச்ச நீதிமன்றம் உத்தரவைத் தொடர்ந்து இங்கிருந்த டாஸ்மாக் கடைகள் அனைத்துமே மூடப்பட்டு விட்டன. தற்போது கன்னியாகுமரியில் டாஸ்மாக் கடைகளே இல்லை.
வரும் காலத்திலும் இதே நிலை தொடர வேண்டும். மூடப்பட்டவற்றுக்கு பதிலாக மாற்று இடத்தில் மதுக்க டைகளை திறக்கக் கூடாது’’ என்றார் அவர்.