இரு சக்கர வாகனம் மோதி இறந்த சிறுவன் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், சென்னகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் சிறுவன் ஜீவா கடந்த 20-ம் தேதி தனது வீட்டருகே சாலையை கடக்கும் போது, இரு சக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்தான் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
விபத்துக்கு காரணமான இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்கள், பலத்த காயமடைந்த சிறுவன் ஜீவாவை மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ மனையில் சேர்த்து அவனைக் காப்பாற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அவனை தூக்கிச் சென்று அருகிலிருந்த அவனது வீட்டிற்குள் விட்டு விட்டு சென்று விட்டனர் என தெரிய வந்துள்ளது.
பணிக்கு சென்றிருந்த ஜீவாவின் பெற்றோர் பணி முடித்து வீடு திரும்பி வந்தவுடன், ரத்த காயங்களுடன் கிடந்த சிறுவன் ஜீவாவை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது சிறுவன் ஜீவா ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுவன் ஜீவா மீது இரு சக்கர வாகனத்தை மோதி அவனது இறப்புக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நான் உத்தரவிட்டுள்ளதன் பேரில், காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்து, வழக்குப் பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த துயரச் சம்பவத்தில் அகால மரணமடைந்த சிறுவன் ஜீவாவின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் ஜீவாவின் குடும்பத்துக்கு முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.