சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய அமைச்சர்கள் ஆய்வு செய்த பிறகும் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணியை தொடங்கு வதில் காலதாமதம் ஏன்? என்ற கேள்வியை தொல்லியல் ஆர்வலர் கள் எழுப்பி உள்ளனர்.
மத்திய தொல்லியல் துறையின் பெங்களூரு பிரிவு அகழாய்வுப் பிரிவு சார்பில் சிவகங்கை மாவட் டம், கீழடியில் 2015, 2016 ஆகிய இரண்டு கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்றது. சுமார் 110 ஏக்கரில் தொல்லியல் பொருட்கள் புதைந்து கிடப்பது கண்டறியப்பட்டது. இதில் ஒரு ஏக்கரில் சங்க காலத் தமிழர்களின் நகர, நாகரிகத்துக்கு ஆதாரமான செங்கல் கட்டிடங்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஓடுகள் உட்பட 5,300 தொல்லியல் பொருட்கள் கிடைத்தன.
இதையடுத்து 2017 ஜனவரியில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடைபெற வேண்டிய மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி வழங்குவதில் காலதாம தம் ஏற்பட்டதால் அகழாய்வு தள் ளிப்போனது. மத்திய அரசு கீழடி அகழாய்வை முடக்கத் திட்டமிட் டுள்ளதாகப் புகார் எழுந்தது.
தமிழர்களின் நகர, நாகரிகத்துக்கு ஆதாரமான கீழடி அகழாய்வு தொடர வேண்டும் என தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையொட்டி பிப்.20-ம் தேதி மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி கிடைத்தது. மார்ச் 17-ம் தேதி ரூ.4.50 லட்சம் நிதி ஒதுக்கீடு மட்டும் செய்யப்பட்டது.
ஏப்ரல் முதல் வாரம் அகழாய்வு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கீழடி அகழாய்வுக் கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா அசாம் மாநிலம் குவாஹத்தியில் புராதனப் பொருட்கள் பராமரிப்பு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் புராதனப் பொருட்கள் பராமரிப்பில் இருந்த உதவி கண்காணிப்பாளர் ராமன் கீழடிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அமர்நாத் ராமகிருஷ்ணா, பெங்களூருவில் உள்ள மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தார். மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் அவரது கோரிக்கையை ஏற்று மத்திய தொல்லியல் துறைக்கு கீழடியில் அமர்நாத் ராமகிருஷ்ணா தன் பணியைத் தொடர அனுமதிக்குமாறு பரிந் துரை செய்தது. இதை ஏற்காத மத்திய தொல்லியல் துறை அவரை அசாம் மாநிலத்துக்கு இடமாற்றம் செய்ததை உறுதி செய்தது.
கீழடி ஆய்வில் அனுபவம் உள்ள அமர்நாத் ராமகிருஷ்ணா தொடர வேண்டும் என மத்திய அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதையொட்டி மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ்சர்மா, இணை அமைச்சர் நிர்மலா சீதா ராமன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய தொல் லியல் துறை தலைமை இயக்குநர் ராகேஷ் திவாரி ஆகியோர் ஏப்.28-ம் தேதி ஆய்வு செய்தனர்.
அமைச்சர் மகேஷ் சர்மா கூறும்போது, கீழடியில் மொத்தம் 5 ஆண்டுகள் அகழாய்வு நடைபெறும்.3-வது ஆண்டு அகழாய்வு பணி ஒரு சில தினங்களில் தொடங்கும். அதற்காக ரூ. 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
அமைச்சர்கள் ஆய்வு முடிந்து பல நாட்களாகியும் இதுவரை அகழாய்வு தொடங்கவில்லை. உதவி கண் காணிப்பாளர் ஸ்ரீராமன், ராஜஸ் தான் ஜோத்பூரில் பணிகளை முடித்துவிட்டு வரவேண்டியுள்ள தால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
மழைக்காலத்துக்கு முன்பு 9 மாதங்கள் நடைபெற வேண்டிய அகழாய்வில் நான்கு மாதங்கள் கழிந்துள்ளன. மீதம் உள்ள 5 மாதங்களிலாவது அகழாய்வுப் பணிகள் விரைந்து நடைபெற வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.