வங்கிகள், அஞ்சல் நிலையங்கள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை 2016-17-ம் ஆண்டுக்கான பணப் பரிவர்த்தனை குறித்த அறிக் கையை தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் நகைக் கடை உரிமையாளர்கள், வாகன உற் பத்தியாளர்கள் ஆகியோருக்கு 2016-17-ம் ஆண்டுக்கான பணப் பரிவர்த்தனை விவரங்கள் தாக்கல் செய்வது குறித்து விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வருமான வரித்துறை (நுண்ணறிவு மற்றும் குற்றப் புலனாய்வு) இணை ஆணையர் எஸ்.நடராஜா, வருமான வரித்துறை அதிகாரிகள் உஷா, சூர்ய நாராயணன் ஆகி யோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், எஸ்.நடராஜா பேசியதாவது:
வருமான வரிச்சட்டம் 1961-ன் படி, 2016-17-ம் நிதியாண்டுக்கான பணப் பரிவர்த்தனை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மே 31-ம் (இன்று) தேதியாகும். வங்கிகள், கூட்டுறவு மற்றும் வர்த்தக வங்கிகள், துணை சார்பதிவாளர்கள், அஞ்சலகங்கள், நிதி நிறுவனங்கள், பங்கு பரிவர்த்தனை முகவர்கள், நிதி ஆலோசகர்கள், வெளிநாட்டு சுற்றுலா ஆபரேட்டர்கள், அந்நிய செலாவணி டீலர்கள் உள்ளிட்டோர் படிவம் 61ஏ மூலம் இந்தப் பணப் பரிவர்த்தனை அறிக்கையை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்ய வேண்டும்.
குறிப்பாக, ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக பணப் பரிவர்த்தனை மேற்கொண்ட நகைக் கடைகள், ஆட்டோமொபைல் டீலர்கள், மீன் வியாபாரிகள், பயண ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் புதிய விதிகள்படி வருமானவரிச் சட்டம் 1961, பிரிவு 285பிஏ-ன் படி இந்தப் பணப் பரிவர்த்தனை அறிக்கையை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும்.
மத்திய அரசு பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு அதிகளவில் பணப் பரிவர்த்தனை மேற்கொண்ட நிறுவனங்களை வருமானவரித் துறையின் நுண்ணறிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
காசோலை அல்லது பணம் உள்ளிட்ட அனைத்து பரிவர்த் தனைகளை மேற்கொள்ளும் போது பான் கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும். கடந்த ஜனவரி 31-ம் தேதிக்குள் பணப் பரிவர்த்தனை தாக்கல் செய்யாத சில வங்கிகளுக்கு அபராத நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மே 31-ம் தேதிக்குள் இந்த அறிக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்களுக்கு அபராத நோட்டீஸ் வழங்கப்படும். அத்துடன், விசாரணைக்கு உத்தரவிடப்படுவதோடு, சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.
மேலும், இந்தப் பணப் பரிவர்த் தனை அறிக்கையை தாக்கல் செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் தோன்றினால் அவர்களுக்கு உதவுவதற்காக வருமான வரி அலுவலகத்தில் உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நடராஜா கூறினார்.