தமிழகம்

வரியை வசூலிக்க கட்டிடங்கள் முன் குப்பை தொட்டிகள்: மதுரை மாநகராட்சியின் நோய் பரப்பும் நடவடிக்கையால் சர்ச்சை

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

ரூ.228 கோடி வரி பாக்கியை வசூலிப்பதற்காக மதுரை மாநகராட்சி ஊழியர்கள், வரிகட்டாத குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கடைகள் முன் துர்நாற்றம் வீசும் குப்பைத் தொட்டிகளை வைத்துச்செல்லும் விநோத நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் வரி செலுத்தாவிட்டால் அந்த கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது, அந்த கட்டிடங்களின் குடிநீர் இணைப்பை துண்டிப்பது உள்ளாட்சி அமைப்புகளில் காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறை. ஆனால், சமீப காலமாக உள்ளாட்சி, சுகாதார சட்டங்களுக்கு மாறாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள் வரிபாக்கியை வசூலிக்க வீடுகள், கட்டிடங்களின் பாதாள சாக்கடை இணைப்புகளை துண்டிப்பது, குப்பைத் தொட்டிகளை வைத்துச் செல்வது போன்ற நோய் பரப்பும் விநோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியும் உள்ளாட்சி அமைப்புகள் அந்த நடவடிக்கைகளை தற்போதுவரை கைவிடவில்லை.

மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் கட்டணம், கடை வாடகை, சொத்து வரி, பாதாள சாக்கடை வரி, தொழில் வரி உள்பட பல்வேறு வருவாய் இனங்கள் மூலம் ஆண்டுக்கு 180 கோடி ரூபாய்க்கு வருவாய் கிடைக்கிறது. இந்த நிதி மற்றும் மத்திய, மாநில அரசு நிதிகள் மூலம் வார்டுகளில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்கிறது. கடந்த ஆண்டு மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற பொதுமக்கள், ஆர்வமாக வரியை ஓரளவு கட்டினர். அதனால், ஒரே நாளில் ரூ.5 கோடி வரையெல்லாம் வரிவசூலானது.

அதன்பின் வரி வசூலில் சுணக்கம் ஏற்பட்டதால் வரிபாக்கி அதிகரித்தது. 2017-18-ம் ஆண்டுக்கு ரூ. 396 கோடி வரிவசூல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பாக்கி ரூ.228 கோடியும், இந்த ஆண்டு புதிய வரி ரூ.168 கோடியை சேர்த்துக் கொண்டதால் இந்த ஆண்டுக்கான வரிவசூல் அதிகரித்துள்ளது. அதனால், மாநகராட்சி அதிகாரிகள் தற்போதே வரிவசூலை முடுக்கி விட்டுள்ளனர். ஒவ்வொரு மண்டலம் வரியாக உதவி ஆணையர்கள் தலைமையில் வருவாய்த் துறை ஊழியர்கள், வரிபாக்கி வைத்துள்ளவர்கள் பட்டியலை தயார் செய்து அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கியும், குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. அதற்கும் வரியை கட்டாதவர்கள் கட்டிடங்கள் முன் தற்போது துர்நாற்றம் வீசும் குப்பை தொட்டிகளை வைக்கும் நடவடிக்கையை மாநகராட்சி எடுத்துள்ளது.

சம்பந்தப்பட்ட கட்டிடங்கள் முன் குப்பைத் தொட்டிகளை வைப்பதால் அந்த கட்டிடங்கள், வணிக வளாகங்களில் வாடகைக்கு கடைகள், அலுவலகங்கள் நடத்துவோர், குப்பைகளின் துர்நாற்றத்தில் தவிக்கின்றனர். நேற்று காலை மதுரை கே.கே.நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றம் எதிரே அமைந்துள்ள இரு வணிக வளாகங்கள் முன், திடீரென்று குப்பைகள் நிரம்பிய இரு பெரிய தொட்டிகளை வைத்து சென்றனர். குப்பைத் தொட்டிகள் வைத்த அந்த வணிக வளாகங்கள், கட்டிடங்கள் முன் மருந்துக் கடை, டீக்கடைகள், ஹோட்டல்கள், ஏடிஎம் அறைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் வணிக நிறுவன கடைகள் ஏராளம் இருக்கின்றன. தற்போது குப்பைத் தொட்டிகளை அந்த கட்டிடங்கள் முன் மாநகராட்சி ஊழியர்கள் வைத்து சென்றதால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாங்களும் நெருக்கடியில் உள்ளோம்

மாநகராட்சி வருவாய்த் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியது: கடந்த ஆண்டு 84 சதவீதம் வரிவசூலானது. வரி கட்டுபவர்கள் முறையாக வரி கட்டுகிறார்கள். வரி கட்டக்கூடாது என நினைப்பவர்கள் கட்டுவதே இல்லை. இதற்கு அபராதம் விதிக்க சட்டத்தில் இடமில்லை. வெறுமனே வரியை கட்டுங்கள் என்று சொன்னால் கட்டமாட்டார்கள். அவர்களுக்கு இதுபோன்ற நெருக்கடிகளை கொடுத்து வரியை கட்ட வைக்கவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம். வரியை வசூலிக்காததால் நாங்களும் நெருக்கடியில் தவிக்கிறோம் என்றார்.

SCROLL FOR NEXT