தமிழகம்

டிடிவி தினகரன், சுகேஷிடம் குரல் மாதிரி சோதனை: நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு போலீஸார் மனு

செய்திப்பிரிவு

டிடிவி தினகரன், சுகேஷ் ஆகியோருக்கு குரல் மாதிரி சோதனை நடத்த அனுமதி கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் போலீஸார் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் ஆணை யத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி, டெல்லி ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கடந்த ஏப்ரல் மாதம் 16-ம் தேதி கைது செய்தனர். முன்பணமாக கொடுக்கப்பட்ட ரூ.10 கோடியில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர்.

சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோரை ஏப்ரல் 25-ம் தேதி டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். லஞ்சப் பணத்தை பரிமாற்றம் செய்ய ஹவாலா தரகராக செயல்பட்ட நரேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 4 பேரும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது குறித்து டிடிவி தினகரனும், சுகேஷும் பலமுறை செல்போனில் பேசியுள்ளனர். இந்த உரையாடலை போலீஸார் பதிவு செய்து வைத்துள்ளனர்.

பதிவு செய்யப்பட்டுள்ள குரல்கள் இவர்கள் இருவருடையதுதான் என்பதை நிரூபிக்க, இருவருக்கும் குரல் மாதிரி சோதனை நடத்துவது அவசியமாகும். எனவே, டிடிவி தினகரன், சுகேஷ் ஆகியோரிடம் குரல் மாதிரி சோதனை நடத்த அனுமதி கொடுக்கும்படி, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி பூனம் சவுத்ரி, இதற்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு டிடிவி தினகரன், சுகேஷ் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

டிடிவி தினகரனின் நீதிமன்றக் காவல் வரும் 15-ம் தேதியுடனும், சுகேஷின் காவல் இன்றுடனும் (12-ம் தேதி) நிறைவடைகிறது.

SCROLL FOR NEXT