பிரபல நகைச்சுவை நடிகர் பாலாஜி மீது அவர் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகர் பாலாஜி. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது, தனியார் தொலைக்காட்சி ஒன் றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார்.
இவரது மனைவி நித்யா (30). 8 வருடங்களுக்கு முன்னர் இவர் பாலாஜியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு போஷிகா என்ற 6 வயது பெண் குழந்தை உள்ளது. பாலாஜி மாதவரம் சாஸ்திரி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பாலாஜிக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவரும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது இந்த விவகாரம் வெளியே தெரிந்தது. அதன் பிறகு அவரது நண்பர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர். இருப்பினும், இருவருக்குமான பிரச்சினை தீரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் மாதவரம் காவல் நிலையத்தில் நித்யா புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “என் கணவர் பாலாஜி எனது சமூகத்தின் பெயரைச் சொல்லி என்னைத் திட்டுகிறார், அடித்து உதைக்கிறார். அவர் என்னை சந்தேகப்படுகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.