தமிழகம்

கோடநாடு எஸ்டேட் சம்பவம்: பங்களா பணிப் பெண்களிடம் போலீஸ் தீவிர விசாரணை - தேடப்படும் கடைசி நபர் இன்று சரண்?

செய்திப்பிரிவு

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை, கொள்ளை தொடர்பாக பங்களாவில் பணியாற்றி வந்த பணிப் பெண்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் தேடப்பட்டுவரும் கடைசி நபர், கோத்தகிரி நீதிமன்றத்தில் இன்று சரணடைய இருப்பதாகத் தெரியவருகிறது.

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 24-ம் தேதி கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் தேடப்பட்ட கனகராஜ் உயிரிழந்து விட்ட நிலையில், மற்றொரு நபரான ஷயான், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடைசி நபரான குட்டியைப் பிடிக்க தனிப்படையினர் கேரளாவில் முகாமிட்டுள்ளனர். குட்டி, தனது சகோதரர் திருமணத்துக்காக அவகாசம் கேட்டிருந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இதனால் கைது படலம் தாமதப்படுத்தப்பட்டது. திருமணம் முடிந்துள்ள நிலையில், குட்டி தலைமறைவாகவே இருந்து வருவதாகவும், இதனால் போலீஸார் உஷார் அடைந்துள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், கோத்தகிரி நீதிமன்றத்தில் குட்டி நேற்று சரணடைய இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால், மாலை வரை அவர் சரணடையவில்லை. இன்று காலை அவர் சரணடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கோடநாடு பங்களாவில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோரது அறைகளில் பணம் இருந்ததா? சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டனவா? என்ற கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சியில் போலீஸார் இறங்கி உள்ளனர். இது தொடர்பாக எஸ்டேட் ஊழியர்களிடம் தனிப்படை போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘எஸ்டேட் மேலா ளர் நடராஜிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. எஸ்டேட் ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ஜெயலலிதா, சசிகலா ஆகியோரிடம் நீண்ட காலமாக வேலை பார்த்து வந்த பணிப் பெண்களிடம், இருவரது அறைகளில் என்னென்ன பொருட் கள் இருந்தன, ஏதேனும் பொருட் கள் மாயமாகி உள்ளனவா? என தீவிர விசாரணை நடத்தப்பட்டது என்றனர்.

SCROLL FOR NEXT