தமிழகம்

குடியரசுத் தலைவர் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தியை தேர்வு செய்ய வேண்டும்: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

குடியரசுத் தலைவர் வேட்பாளராக கோபால கிருஷ்ண காந்தியை எதிர்க்கட்சிகள் தேர்வு செய்ய வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. ஆர்எஸ்எஸ் கொள்கையில் ஈடுபாடும், உறுதியும் உள்ளவரை மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக தேர்வுசெய்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கும்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (26-ம் தேதி) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் கூடி, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசித்துள்ளார்கள். இந்த ஆலோசனைகள் தொடரக்கூடும்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் மரபு முறையில் வடக்கில் சென்ற முறை வாய்ப்பு என்றால் இம்முறை தென்மாநிலங்களுக்கு வாய்ப்பு அளிப்பதே நாட்டு நலனுக்கு உகந்தது. அந்த வகையில், காந்தி மற்றும் ராஜாஜியின் பேரனான கோபால கிருஷ்ண காந்தியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் முன்மொழிந்து வெற்றிபெற முயற்சிப்பது சிறப்பானது.

அவர் ஜாதி, மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட சிறந்த நிர்வாகி. வெளிநாட்டு தூதர், ஆளுநர், குடியரசுத் தலைவரின் தனிச் செயலாளர் போன்ற பதவிகளை வகித்து சிறப்பான அனுபவத்தை பெற்று நல்ல பெயர் எடுத்தவர். அவரை வேட்பாளராக நிறுத்துவது நாட்டு நலனுக்கு மிகவும் ஏற்புடையதாகும்.

SCROLL FOR NEXT