தமிழர் உரிமைக்கான மாணவர்கள் இளைஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் இயக்குநர் கவுதமன் உள்ளிட்டோர் நேற்று தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவில், தனியார் பள்ளிகளில் நடக்கும் விதிமீறல்கள் தொடர்பான மனுவை அளித்தனர்.
இது தொடர்பாக இயக்குநர் கவுதமன் கூறிய தாவது:
பிள்ளைகளை படிக்க வைக்க பெற்றோர், பணத்தை தேடி ஓடி வருகின்றனர். இது பெற்றோரை குற்றச்செயல்களில் ஈடுபட தூண்டிவிடுகிறது. இதை அரசு வேடிக்கை பார்க்கிறது. கல்விக் கட்டணம் முறைப்படுத்தப்பட்டு வெளிப்படைத் தன்மையுடன், கல்விக் கட்டணம் தெளிவாக வெளியிடப்பட வேண்டும்.
பள்ளிகள் ஒரு சில மாணவர்களை மட்டுமே பிரதானப் படுத்தும்போது மற்ற மாணவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது. தனியார் பள்ளிகள் தங்கள் இஷ்டத்துக்கு கட்டணத்தை உயர்த்துகின்றனர். இதை மாற்ற அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். பள்ளிகளில் மது அருந்தும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. சரியான கழிப்பறை வசதிகள் இல்லை. ஆசிரியர் பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. இதை அரசு உடனடியாக செய்ய வேண்டும்.
உலகம் முழுவதும் தாய்மொழிக் கல்வி உள்ளது. தமிழகத்தில்தான் அரசு பள்ளிகளிலும் ஆங்கிலம் உள்ளது. தமிழ் நிராகரிக்கப்படுகிறது. கேரளாவில் மலையாளத்துக்கு இட்ட கட்டளை போல், தமிழகத்தில் தமிழ் வழிக்கல்வியை கட்டாயப்படுத்த வேண்டும். உடனடியாக பள்ளிக் கட்டணத்தை அறிவித்து அதன்படி கட்டணம் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.