போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய ஊதிய ஒப்பந்தம், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பணப் பயன்கள், ஓய்வூதியம், போக்குவரத்துக் கழகங்களின் அனைத்து பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வரவு-செலவு வித்தியாசங்களை சரி செய்ய வேண்டும்.
தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை ரூ.4500 கோடியை உரிய கணக்கில் சேர்க்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நிலுவைத் தொகை ரூ.1700 கோடி, பணியில் உள்ள தொழிலாளர்கள் நிலுவைத் தொகை ரூ.300 கோடியை உடனே வழங்க வேண்டும் போன்ற முக்கியமான 7 கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
தொழிலாளர் நலத்துறை தனி ஆணையர் முன்னிலையில், போக்குவரத்துத்துறை நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டதால், தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
அரசு போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில், தனியார் பேருந்துகளை இயக்குவோம் என்று அறைகூவல் விடுப்பதும், அனுபவமில்லாத தற்காலிக ஊழியர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்குவதும் சரியான அணுகுமுறை இல்லை என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.
கோடை விடுமுறை காலத்தில் மக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்பதால், அரசுப் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முன்வரவேண்டும்.
ஒரு லட்சத்து 43 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றும் மிக முக்கியமான போக்குவரத்துத் துறையில், கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் தொழிலாளர்களுடன் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.