சென்னை: இந்த நூற்றாண்டிலும் பில்லி சூனியம், மாந்திரீகம் ஆகியவற்றை நம்பி, நரபலி கொடுக்கப்படுவதாக கேள்விப்படுவது அதிர்ச்சியளிக்கிறது என்று நரபலி கொடுப்பதிலிருந்து பாதுகாப்பு கோரி மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா தாக்கல் செய்த மனுவில், “நான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனும் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர். எனது வளர்ப்புத் தாய் சுதா ஷர்மா, மாந்த்ரீகங்களிலும், மூட நம்பிக்கைகளிலும் நம்பிக்கை கொண்டவர். என்னை நரபலி கொடுக்க அவர் முடிவு செய்துள்ளார்.ஏற்கெனவே, எனது 10 வயது சகோதரனையும், மேலும் இருவரையும் அவர் நரபலி கொடுத்துள்ளார். ஆர்எஸ்எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிராக போலீஸில் புகாரளிக்க யாருக்கும் தைரியமில்லை.
நரபலியில் இருந்து தப்பிப்பதற்காக தட்சிணாமூர்த்தி என்ற நண்பரின் உதவியுடன் பிப்ரவரி 17-ம் தேதி சென்னை வந்தேன். தந்தை பெரியார் திராவிடர் கழக செயலாளர் வீட்டில் தங்கியிருக்கும் என்னை, குடும்பத்தினரும், ஏபிவிபி அமைப்பினரும் வலுக்கட்டாயமாக போபால் அழைத்துச் சென்றுவிடுவர். வலுக்கட்டாயமாக என்னை போபாலுக்கு கொண்டு சென்றுவிட்டால் என்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளது. தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதால் எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான, தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, "மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். ஆன்லைனில் பெறப்பட்ட புகாரும் விசாரிக்கப்படும்" என்று தெரிவித்தார். அப்போது மனுதாரர் ஷாலினி ஆஜராகி, "தனக்கு பாதுகாப்பு வழங்கிய தட்சிணாமூர்த்தி மற்றும் விக்னேஷ் ஆகியோருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, "இந்த நூற்றாண்டிலும் பில்லி சூனியம், மாந்திரீகம் ஆகியவற்றை நம்பி, நரபலி கொடுக்கப்படுவதாக கேள்விப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. மனுதாரருக்கும் அவருக்கு உதவிய இருவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த மனுவுக்கு ஷாலினி சர்மாவின் பெற்றோர் பதிலளிக்க வேண்டும். நரபலி தொடர்பாக மனுதாரர் அளித்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, போபால் காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.