சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு, நியாயத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வரலாற்று சிறப்பு மிக்க உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு நியாயத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெறும் தலைவர்களின் நல் ஆசியுடனும், ஒன்றரை கோடி தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவுடனும்,கழகத்தை வழிநடத்தவும், அம்மா அவர்கள் கண்ட நூறாண்டு சரித்திரக் கனவை நனவாக்கவும் உயிர் மூச்சுள்ளவரை உங்களில் ஒருவனாக பணியாற்றுவேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, 2022 ஜூலை 11 ஆம் தேதியன்று நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யபப்ட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தும், ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது.
மேலும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக எந்த கோரிக்கையும் தங்கள் முன்பு வைக்கப்படவில்லை. எனவே, தீர்மானங்கள் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.