நிகழ்வில் பேசிய ராமதாஸ் 
தமிழகம்

தமிழில் பெயர்ப்பலகை இல்லாவிட்டால் கருப்பு மையை கையில் எடுங்கள்: ராமதாஸ்

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: தமிழில் பெயர் பலகை இல்லாவிட்டால் கருப்பு மையை கையில் எடுங்கள். நானும் உங்களோடு வருகிறேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

அழிவின் விளிம்பிலிருந்து அன்னைத் தமிழைக் காப்பதற்காக ராமதாஸ் 8 நாள் தமிழைத் தேடி என்ற விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் 3 ஆம் நாள் பரப்புரை கூட்டம் புதுவை கம்பன் கலையரங்கில் இன்று நடைபெற்றது.

பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் மணி தலைமை வகித்தார். புதுவை தமிழ் சங்க தலைவர் முத்து முன்னிலை வகித்தார், பாமக மாநில பொறுப்பாளர் கணபதி வரவேற்றார்

இந்நிகழ்வில் ராமதாஸ் பேசியதாவது, " சென்னையை விட புதுவையில் தமிழ் சங்கங்கள் அதிகம், தமிழகத்தை ஒப்பிடும்போது புதுவையில் பிற மொழிகலப்பு குறைவு. தனித்தமிழ் இயக்கங்கள் தோன்றிய முன்னோடியான இடம் புதுவை. அதனால் இதனை சவாலாக எடுத்துக்கொண்டு தமிழை மீட்க அறிஞர்கள் பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் தமிழ் கட்டாய பாடமாக இயற்றப்பட்டு அமலுக்கு வரவே இல்லை. அதே நிலை தான் புதுவையிலும் உள்ளது.

திரைப்படங்களிலும் தமிழில் ஓரிரு வார்த்தைகள் தான் பயன்படுத்தப்படுகிறது, அதேநேரத்தில் புகைப்பதும், மது அருந்துவதும் அதிகளவில் உள்ளது. முழுமையான தமிழ் வசனங்களுடன் திரைப்படங்கள் வர வேண்டும். தமிழை வளர்க்க நாங்கள் பாடுபட்டதை பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும், தமிழ் இசையை வளர்க்கவும் நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.

பிரான்ஸ் நாட்டிற்குள் ஒரே ஒரு ஆங்கில சொல் நுழைந்துவிட்டது. பிரெஞ்ச் இளைஞர்கள் கொதித்து போனார்கள் அந்த சொல், "தேங்க்யூ". அதற்கு பதிலாக மெர்சி என கூறி நன்றியை தெரிவிக்கின்றனர். பெயர் பலகையில் எப்படி எழுத வேண்டும் என வழிகாட்டி 15 நாட்கள் அவகாசம் தாருங்கள். அதற்கு பிறகும், தமிழில் பெயர் பலகை இல்லாவிட்டால் கருப்பு மையை கையில் எடுங்கள், நானும் உங்களோடு சேர்ந்து கருப்பு மை பூச வருகிறேன், பிற மொழி கலப்பு இல்லாமல் தமிழை பேசுங்கள். இதை உங்கள் வீடுகளில் இருந்தே தொடங்குங்கள். நாம் பிற மொழிக்கு எதிரி அல்ல. தமிழை மீட்போம்." என்றார். இந்நிகழ்வில் தமிழ் அறிஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT