சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி நடத்திய தர்மயுத்தம் வென்றுள்ளதாக அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்வதாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக மூத்த தலைவர் கூறிய கருத்துகள்:
கே.பி.முனுசாமி: "இந்த தீர்ப்பின் மூலம் தர்மம் வென்றுள்ளது. எடப்பாடி பழனிசாமி நடத்திய தர்மயுத்தம் இன்று வெற்றி பெற்றுள்ளது. நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம். கட்சிக்கு சோதனை வந்த காலத்தில், இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் தொண்டர்களின் உள்ளம் குளிர்ந்துள்ளது" என்று கூறினார்.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: "அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியாக இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டுள்ளது. பொதுக் குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த பொதுக் குழுவில் தான் ஓபிஎஸ் உள்ளிட்டவர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். உச்ச நீதின்றம் வழங்கிய தீர்ப்பால் அதிமுக பீடுநடை போடும்" என்று அவர் தெரிவித்தார்.