சென்னை: பட்டினப்பாக்கத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி மீன் கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை, பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பத்தில் மீனவர்கள் சாலை ஓரத்தில் கடைகளை அமைத்து மீன் விற்பனை செய்து வருகின்றனர். மீன்களை வாங்கதினமும் ஏராளமானோர் வருகின்றனர். அவர்கள் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாகக் கூறி, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அங்குள்ள மீன் கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸார், மாநகராட்சி அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையர் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான் கூறும்போது, ``கலங்கரை விளக்கம் முதல் நொச்சிக்கும் வரை உள்ள மெரினா வளைவு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மீன் கடைகள் வைத்திருப்பதாகப் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, அவர்களை அகற்றி சாலைக்கு பதிலாக நடைபாதை யில் கடைகள் வைக்க அறிவுறுத்தப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் மறியலில் ஈடுபட்டனர். மாநகராட்சி சார்பில் கலங்கரை விளக்கம் அருகில் ரூ.10 கோடியில் நவீன மீன் சந்தை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் வரும் மே மாதத்தில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தை பயன்பாட்டுக்கு வரும்போது, இந்த சாலையோர மீன் கடை அனைத்தும் சந்தைக்குள் செயல்படும். அப்போது போக்குவரத்துக்கு இடையூறு இருக்காது. சந்தை பயன்பாட்டுக்கு வரும் வரை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடைபாதை பகுதிகளில் மீன் விற்கக் கடைக்காரர்களை அறிவுறுத்தி இருக்கிறோம்'' என்று கூறினார்.