கடலூர்: சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவிற்கு வருகை தரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி , நடராஜர் கோயில் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதனையொட்டி போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
ஆளுனர் ஆர் என். ரவி இன்று (பிப்.22) காலை 12.30 சென்னை ராஜ்பவனிலிருந்து புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு புதுச்சேரி அக்கார்டு ஹோட்டல் வந்தடைகிறார். அங்கு மதிய உணவு மற்றும் ஓய்வு எடுத்த பிறகு மாலை 3 மணிக்கு புறப்பட்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதிக்கு கார் மூலம் மதியம் 4.30 மணிக்கு வந்தடைகிறார்.
பின்னர் மாலை 6.30 மணிக்கு சிதம்பரம் தெற்கு வீதியில் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் நடைபெற்று வரும் 42வது நாட்டியாஞ்சலி விழா நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில் நாட்டியக் கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பேசுகிறார். விழா முடிந்தவுடன் இரவு 8.40 மணிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதிக்கு சென்று இரவு தங்குகிறார்.
நாளை (பிப்.23) காலை 7 மணிக்கு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் பல்கலைக்கழக விருந்தினர் விடுதிக்கு சென்று ஓய்வு எடுத்த பின்னர் காலை 9.30 மணிக்கு சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்திற்கு சென்று சுவாமி சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
இதனை தொடர்ந்து கார் மூலம் புதுச்சேரி அக்கார்டு ஹோட்டலுக்கு சென்று சிறுது நேரம் ஓய்வெடுத்த பின்னர் காலை 11.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கார் மூலம் சென்னை ராஜ்பவன் சென்றடைகிறார். ஆளுநர் வருகையை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜா ராம் மேற்பார்வையில் சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆளுநர் ஓய்வு எடுக்கும அண்ணாமலைப் பல்கலைக்கழக விடுதியை விருந்தினர் விடுதியை போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். விடுதி மற்றும் விடுதியை சுற்றியுள்ள பகுதியில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது போல நாட்டியாஞ்சலி நடைபெறும் சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாக பகுதியையும் போலீஸார் தங்கள் கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு கருவிகளுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.