சென்னை: வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம்2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்படுகிறது. அவ்வாறு கணக்கெடுத்த பிறகு 20 நாட்களுக்குள் மின்கட்டணம் செலுத்த வேண்டும். இல்லையெனில், அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். பின்னர், அபராதத்துடன் சேர்த்து கட்டணம் செலுத்திய பிறகு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும்.
இந்நிலையில், சென்னையில் உள்ளபல்வேறு மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் ஒரே கவுன்ட்டர் மட்டுமே செயல்படுவதால் பல மணி நேரம்காத்திருந்து மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதாக மின்நுகர்வோர் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மின்நுகர்வோர் கூறியதாவது: மின் கட்டணத்தை கணக்கெடுத்த 20 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.தற்போது மின்கட்டணத்தை ஆன்லைன்மூலம் செலுத்தும் வசதி உள்ளது.ஆனால், சிலர் மட்டுமே ஆன்லைன்மூலம் பணம் செலுத்துகின்றனர். பெரும்பாலானோர் மின்வாரிய பிரிவு அலுவலகங்களுக்கு நேரில் சென்று செலுத்துகின்றனர்.
முன்பு மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் மின்கட்டணம் வசூலிக்க குறைந்தது 4 முதல் 5 கவுன்ட்டர்கள் இருந்தன. தற்போது பெரும்பாலான மின்வாரிய அலுவலகங்களில் ஒரே ஒரு கவுன்ட்டர் மட்டுமே செயல்படுகிறது. இதனால்,கூட்டம் அலைமோதுகிறது. மின்கட்டணம் செலுத்த குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் ஆகிறது.
இதனால், வயதானவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மின்வாரிய அலுவலகங்களில் கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று கூறினர்.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ``ஊழியர் பற்றாக்குறை காரணமாக சில அலுவலகங்களில் மின்கட்டணம் செலுத்த ஒரே ஒரு கவுன்ட்டர் மட்டுமே செயல்படுகிறது. இது தொடர்பாக மின்நுகர்வோர்களிடம் இருந்து எங்களுக்கும் புகார்கள் வந்துள்ளன. விரைவில் கூடுதல் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.