தமிழக காவல் துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு தமிழக முதல்வர் காவல் பதக்கங்கள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. அதன்படி சிறப்பாக பணி செய்த 544 ஆண் மற்றும் பெண் போலீஸாருக்கு தமிழக முதல்வர் காவல் பதக்கங்களை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று வழங்கினார். 
தமிழகம்

10 ஆண்டுகள் தொடர்ந்து சிறப்பாக பணி செய்த 544 போலீஸாருக்கு முதல்வர் காவல் பதக்கம்: சங்கர் ஜிவால் வழங்கினார்

செய்திப்பிரிவு

சென்னை: காவல் துறையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் சிறப்பாக பணி செய்த 544போலீஸாருக்கு முதல்வர் காவல் பதக்கங்களை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார்.

தமிழக காவல் துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு முதல்வர் காவல் பதக்கங்கள், அந்தந்த நகரங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 2023-ம் ஆண்டுக்கான முதல்வர் காவல்பதக்கங்கள் பெறுவதற்கு, சென்னை பெருநகர காவல் துறையில் 544 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

பத்து ஆண்டுகள் எவ்வித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரிந்த சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் பணிபுரியும் 173 போலீஸார், போக்குவரத்து போலீஸார் 149 பேர், ஆயுதப்படையில் 80 பேர், நுண்ணறிவுப் பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, நவீன காவல் கட்டுப்பாட்டறை, சென்னை பாதுகாப்பு காவல் பிரிவு, உயர் நீதிமன்ற பாதுகாப்பு காவல் பிரிவு, குற்ற ஆவண காப்பகம், பணியிடை பயிற்சி மையம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் 85 போலீஸார் மற்றும் இதர பிரிவுகளான ரயில்வே, கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும்செயலாக்கம் ஆகிய காவல் பிரிவுகளில் பணிபுரியும் 57 பேர் என மொத்தம் 544 ஆண், பெண் போலீஸார் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அவர்களுக்கு எழும்பூர் ராஜரத்தினம் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் காவல் பதக்கங்களை சென்னை காவல் ஆணையர் சங்கர்ஜிவால் வழங்கினார். அவர் பேசும்போது, ‘‘பதக்கத்தை பெற்றுள்ள அனைவருக்கும் பாராட்டுகள்.

இதேபோல வரும் காலங்களிலும் நீங்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். இந்தியாவிலேயே தமிழக காவல்துறை முதல்இடம் வர நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணி செய்வோம்’’ என்றார்.

கூடுதல் டிஜிபிக்கள் சைலேஷ்குமார் யாதவ், மகேஷ்குமார் அகர்வால், டேவிட்சன் தேவாசீர்வாதம், சந்தீப் மித்தல், பாலநாகதேவி, அபின் தினேஷ் மொடக், வனிதா உள்ளிட்டோரும் பதக்கங்களை வழங்கினர்.

SCROLL FOR NEXT