தமிழகம்

போயஸ் கார்டன் எங்களுக்கு சொந்தமானது: ஜெ.தீபா பேட்டி

செய்திப்பிரிவு

Jayalalithaa’s Poes Garden house belongs to Deepak and I, says Deepa

போயஸ் கார்டன் எனக்கும் தீபக்குக்கும்தான் சொந்தமானது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் தலைவருமான ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை பேசிய தீபா, ''போயஸ் கார்டன் எனக்கும் தீபக்குக்கும் சொந்தமான இடம். இதை அதிமுகவின் இரண்டு அணிகளும் நினைவிடமாக்கத் துடிப்பது ஏன்?

ஜெயலலிதாவின் ரத்த உறவுகளான எங்கள் இருவரையும் பழிவாங்கும் நோக்கில், போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்க எண்ணுகின்றனர்.

அவர்களின் தவறுகளை மறைக்கவே, போயஸ் கார்டனை நினைவிடமாக்கும் திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஜெயலலிதாவின் அனைத்து சொத்துகளுக்கும் சட்டரீதியான வாரிசுகள் நானும் தீபக்கும்தான். எங்களிடம் முன் அனுமதி பெறாமல், போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்குவது சட்டப்படியும், தார்மீக ரீதியிலும் தவறானது.

பினாமி ஆட்சிக்கு என்ன உரிமை இருக்கிறது?

சசிகலாவின் பினாமியாகச் செயல்படும் இந்த அரசுக்கு, போயஸ் கார்டனை நினைவிடமாக்க என்ன உரிமை இருக்கிறது? ஒருவேளை சசிகலா இந்த நாடகத்தை நடத்தினால், சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்க நானும் தயாராக இருக்கிறேன்.

ஜெயலலிதாவுக்காக வாக்களித்த மக்களின் நலனுக்காக இந்த பினாமி அரசு பணிபுரிய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT